கும்பமேளா 'மோனலிசா' | ஹீரோயின் வாய்ப்பு தந்த இயக்குநர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது!
உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்.26ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. கிட்டத்தட்ட 40 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல்வேறு முக்கியமான சம்பவங்கள் அரங்கேறின. தவிர, இதில் 60 கோடி பக்தர்கள் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த கும்பமேளாவில் அழகான மயக்கும் கண்கள், ஈர்க்கும் சிரிப்பு, நம்பிக்கையான பேச்சு, எளிமையான தோற்றம் என பாசிமணி விற்கும் 16 வயது இளம்பெண் மோனலிசா போஸ்லே ஒரேநாளில் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலானார். இதைத் தொடர்ந்து அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு தேடி வந்தது. பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா மோனாலிசாவை தனது அடுத்த படத்தில் நடிக்க வைப்பதாக அறிவித்தார். ’டைரீஸ் ஆஃப் மணிப்பூர்’ என்ற அந்த படத்திற்காக மோனாலிசாவிக்கு ரூ.21 லட்சம் சம்பளமும் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தால் அவரது ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை அடுத்து இந்த கைது நடைபெற்றுள்ளது.
முன்னதாக, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை, தன் படத்தில் வாய்ப்புகள் தருவதாக அவருக்கு ஆசை காட்டி, சனோஜ் மிஸ்ரா பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், பாலியல் வன்புணர்வு காட்சிகளை படம்பிடித்து வைத்துக்கொண்டு அப்பெண்ணை தொடர்ந்து வன்கொடுமை செய்துவந்துள்ளார். தவிர, அவரை திருணம் செய்துகொள்வதாக ஏமாற்றி மூன்று முறை கட்டாய கருக்கலைப்புக்கும் உட்படுத்தி உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் மோனாலிசாவுக்கு வாய்ப்பு கொடுப்பதாக அறிவித்த பின்னர் அப்பெண்ணை கைவிட்டுள்ளார். இந்த நிலையில்தான் அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சனோஜ் மிஸ்ரா அளித்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.