“ஊழல் செய்தவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் நடவடிக்கை பாயும்” - பிரதமர் மோடி எச்சரிக்கை
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் மக்களவைத் தேர்தலையொட்டி பரப்புரை மேற்கொண்ட பிரதமர், “ஊழலுக்கு எதிராக நான் போராடி வருவதாலேயே எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணியை அமைத்திருக்கிறது. ஊழல்வாதிகளை காப்பாற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகள் முயற்சிக்கின்றன.
ஊழல் குற்றவாளி மிகப்பெரிய ஆளாக இருந்தாலும் எங்கள் அரசு நடவடிக்கை எடுக்க தயங்காது. இதுவரை 17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ஊழல்வாதிகளிடம் இருந்து பறிமுதல் செய்திருக்கிறோம். அவை அனைத்தும் ஏழை மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டவை.
பாஜக ஆட்சியில் நாடு வேகமாக வளர்ந்து வருகிறது. இது வெறும் ட்ரெய்லர் மட்டுமே. இன்னும் மிகப்பெரிய திட்டங்கள் வர உள்ளன” என தெரிவித்தார்.
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் போராடிக் கொண்டிருந்த சூழலில் பிரதமர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.