“கச்சத்தீவு மீது திடீரென மோடிக்கு ஏன் அக்கறை? 10 வருடங்களாக எங்கே போயிருந்தார்?” - சீமான் ஆவேசம்!

“பாஜக என்னோட பி டீம், அண்ணாமலை என்னோட ஸ்லீப்பர் செல், திராவிடம் எங்கள் பங்காளி, பாஜக - காங்கிரஸ் பகையாளி” என்று மதுரை பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.
சீமான் பரப்புரை
சீமான் பரப்புரைட்விட்டர்

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா தேவிக்கு ஒலிவாங்கி சின்னத்தில் வாக்கு சேகரித்து, மதுரை புதூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்....

“தாய் மீதும் தமிழ் மீதும் உறுதியாக சொல்கிறேன் பதவிக்காகவோ பணத்திற்காகவோ வந்தவர்கள் அல்ல நாங்கள். மக்களுக்கு உழைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே வந்துள்ளோம். ஒரே ஒருமுறை எங்களை நம்பி வாக்களித்துப் பாருங்கள். 6 தேர்தல்களில் 7 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம்,

சீமான் பரப்புரை, மதுரை
சீமான் பரப்புரை, மதுரை

நாங்கள் 10 சதவித வாக்குகள் பெறுவதை திமுக தடுத்தது, இஸ்லாமியர், கிறிஸ்துவர்களிடம் நான் பாஜகவின் பி டீம் என பொய்யை பரப்பினார்கள். அதனை இந்த மக்கள் நம்பினார்கள். கமல்ஹாசன், டிடிவி தினகரன் வந்ததால் எங்களது வாக்கு சதவிகிதம் குறைந்து விட்டது. என் கட்சி அங்கீகாரத்தை தடுத்தார்கள்.

ஊழல் லஞ்சத்தை துடைத்து குப்பை தொட்டியில் போடுவதுதான் எங்கள் கனவு. 200 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் எப்படி வாழவேண்டும் என்பது எங்கள் இலக்கு. FIRST COME FIRST SERVE என்றால் சைக்கிள் சின்னமும், குக்கர் சின்னமும் எப்படி கிடைத்தது? தேர்தல் ஆணையம் எவ்வளவு நேர்மையாக செயல்படுகிறது பாருங்கள்...

40 தொகுதியிலும் 40 அடையாளம் தெரியாத நபர்களை நிறுத்தி சீமானை வீழ்த்தலாம் என நினைக்கிறார்கள், மக்களை மங்குணி என நினைக்கிறார்கள். சீமானுக்கும், சீமான் எண்ணத்திற்கும்தான் மக்கள் வாக்களித்தார்கள் என்பதை பிற கட்சிகள் பார்க்கதான் போகிறார்கள்.

சீமான் பரப்புரை, மதுரை
சீமான் பரப்புரை, மதுரை

இந்திய மொழியின் தொன்மையான மொழி தமிழ் மொழி என நான் பேசியதை மோடி பேசி வருகிறார். நான் இங்கு பேசுவதை உலக நாடுகள் முழுவதும் மோடி பேசி வருகிறார். அவ்வளவு தொன்மையான மொழிக்கு நீங்கள் கொடுத்த அங்கீகாரம் என்ன? சமஸ்கிருதம், இந்தி மொழி புதிய நாடாளுமன்றத்தில் உள்ளது. ‘தமிழ் தெரியவில்லை, நான் தமிழனாக பிறக்கவில்லையே என வருந்துகிறேன்’ என மோடி பேசி வருகிறார். அப்படியென்றால் நானும் குஜராத்தி பேச இயலவில்லையே, குஜராத்தியாக பிறக்கவில்லையே என வருந்துகிறேன்!

சிவாஜியின் நடிப்பை பார்த்து வளர்ந்த எங்களுக்கு மோடியின் நடிப்பு எம்மாத்திரம்.

கச்சத்தீவை தாரை வார்த்து விட்டார்களா என மோடி பேசுவது, காந்தி இறந்துவிட்டாரா எனக் கேட்பது போல் உள்ளது. அண்ணாமலை ஆர்டிஐ போட்டு கச்சத்தீவு குறித்து தெரியப்படுத்தினாராம். இத்தனை காலம் கழித்து இப்போது கச்சத்தீவை பற்றி பேசுகிறார்கள். பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த பிரதமருக்கு, 840 மீனவர்கள் கொல்லப்பட்ட போது வராத அக்கறை கச்சத்தீவின் மீது திடீரென வரக்காரணம் என்ன?

அண்ணாமலை என்னுடைய ஸ்லீப்பர் செல். நான்தான் உள்ளே அனுப்பி வைத்துள்ளேன். என் மண் என் மக்கள், வேல் யாத்திரை இவையெல்லாம் நான் முன்னெடுத்த செயல்கள். அதனால் மோடி, என் தம்பி அண்ணாமலை எனக்கு வேலை செய்கிறார் என்பதை கவனத்தில் வைத்து வேலை செய்யுங்கள்.

திராவிடம், நம் பங்காளி. எப்போது வேண்டுமானாலும் சண்டை போடலாம். ஆனால், பாஜக - காங்கிரஸ் பகையாளிகள். எப்போதும் உள்ளே நுழையவிடக் கூடாது. இல்லையென்றால் இந்தி சமஸ்கிருதம் என தூக்கிக் கொண்டு வருவார்கள். தமிழ்நாடு என்ன கருணாநிதி குடும்பத்துக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா? தகர்த்தெறிகிறேன் பாருங்கள். என்னை விட்டால் உங்களுக்கு வேறு நாதி இல்லை. உங்களை விட்டால் எனக்கும் வேறு நாதி இல்லை” என்று கூறி, பாட்டுப் பாடி சீமான் வாக்கு சேகரித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com