மேற்கு வங்கத்தில் ரேசன் கடைகள் மூலமாக குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக பல்வேறு புகார்கள் வந்திருந்தன. இது தொடர்பாக North 24 Parganas மாவட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சென்ற போது அவர்களது கார்கள் தாக்கப்பட்டன. சந்தேஷ்காளி என்னும் இடத்தில் 200க்கும் மேற்பட்ட உள்ளூர்வாசிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இதன் காரணமாக பல அதிகாரிகள் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
ரேசன் விநியோக ஊழல் தொடர்பாக, அம்மாநிலத்தில் 15 இடங்களில் சோதனை நடத்த திட்டமிட்டு, அந்த வழக்கில் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்ட ஷாஜஹான் ஷேக்கின் இல்லத்திலும் சோதனை மேற்கொள்ள சென்றனர். இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மாநில அமைச்சர் ஜோதிபிரியா மல்லிக்கின் நெருங்கிய ஆதரவாளராக அறியப்படுபவர் ஷாஜஹான் ஷேக். இந்நிலையில் அவரது இல்லத்திற்கு அமலாக்கத்துறையினர் சென்ற போது அவரது வீடு பூட்டப்ப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் கதவை உடைக்க முற்பட்டபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு) கார்களை சூழ்ந்த கும்பல் முதலில் அதிகாரிகளை அங்கிருந்து செல்லும் படி முழக்கங்களை எழுப்பியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என தி டெலிகிராப் ஆன்லைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “இதுபோன்ற தாக்குதல் இதற்கு முன் நிகழ்ந்ததில்லை. ஷேக் ஷாஜஹான் பற்றிய அறிக்கையை நாங்கள் டெல்லி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளோம்” என பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்டது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் எனவும் காவல்துறையினர் அவர்களை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர் எனவும் பாஜகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். மத்திய அரசு அமைப்பான அமலாக்கத்துறைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதோடு அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் தடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்றும், இவ்விவகாரம் குறித்து தேசிய புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். தாக்குதலால் காயமடைந்த அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.