”நாங்கள் மியான்மரீஸ்கள் அல்ல; இந்தியர்கள்” - அமித்ஷா பேச்சுக்கு கூட்டணி கட்சி எம்.பி. எதிர்ப்பு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்துள்ள நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மூன்று தினங்கள் நடந்த நிலையில் பிரதமர் மோடி அத்தீர்மானத்திற்கான விவாதத்தின் மீது பதில் அளித்தார்.
மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என எதிர்கட்சிகள் கூறினர். இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மணிப்பூர் கலவரத்தை வைத்து அரசியல் செய்வதை அனுமதிக்க முடியாது. கலவரம் நடந்தது உண்மைதான். யாரும் அதை ஆதரிக்கவில்லை. யாரும் இதில் அரசியல் செய்ய வேண்டாம். இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார். மேலும் அவரது பேச்சில் மியான்மர் நாட்டில் இருந்து ஊடுருவிய பழங்குடியின மக்கள் தான் வன்முறைக்கு காரணம் என கூறியதாக சொல்லப்பட்ட நிலையில் அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மிசோரம் தேசிய முன்னணி கட்சியின் எம்.பி.யான வான்லவேனே இதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பேசிய அவர், “நான் மிசோரத்தை சேர்ந்தவன். நான் பழங்குடி எம்.பி. மணிப்பூரில் உள்ள பழங்குடிகள் மியான்மர் நாட்டைச் சேர்ந்த மியான்மரீஸ் என உள்துறை அமைச்சர் கூறினார். நாங்கள் மியான்மரீஸ்கள் அல்ல. நாங்கள் இந்தியர்கள்” என அமித்ஷாவின் பேச்சிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு எம்.பி.க்கள் பலரும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.