ரத்து செய்யப்பட்ட பிரதமரின் பிரச்சாரம்.. ஆதிக்கம் செலுத்தும் மாநில கட்சிகள்.. மிசோரம் களம் ஓர் அலசல்

மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம் இரண்டும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் மிசோரம் பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டது.
மிசோரம் தேர்தல்
மிசோரம் தேர்தல்pt web

நாட்டின் ஒட்டுமொத்த கவனமும் தற்போது ஐந்து மாநில தேர்தலை நோக்கியே உள்ளது. நவம்பர் 7ஆம் தேதி முதல் மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா போன்ற மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளன. அதன்படி, மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ஆம் தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17 ஆம் தேதிகளும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17 ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25-ஆம் தேதியும், தெலங்கானாவில் நவம்பர் 30 தேதியும் தேர்தல் நடைபெற உள்ளன.

அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், மக்களின் மனநிலையை அறிந்துகொள்வதற்கான முன்னோட்டமாக இத்தேர்தல் பார்க்கப்படுகிறது.

மிசோரம் தேர்தல் களம்

ஐந்து மாநிலங்களில் முதலில் தேர்தல் நடக்கும் மாநிலம் என்பதாலும் வடகிழக்கு மாநிலம் என்பதாலும் சற்றே கூடுதல் கவனத்துடனே தேசியக்கட்சிகள் இம்மாநிலத்தை அணுகுகின்றன. ஏனெனில் மிசோரம் மாநிலத்தில் மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் பெரிய பேரணி, பொதுக்கூட்டம், சாலை மறியல் போன்றவைகள் எல்லாம் நடைபெறாத ஒன்று.

கிறிஸ்தவ தேவாலய ஆதரவு அமைப்பான மிசோ மக்கள் மன்றம் சமூக கூட்டங்கள் அல்லது பொது மேடைகளுக்கு ஏற்பாடு செய்யும். தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டு தங்களது பிரச்சாரத்தை செய்வர். ஒவ்வொரு வேட்பாளருக்கும் 20 நிமிடங்கள் ஒதுக்கப்படும். வேட்பாளர்களின் உரையைக் கேட்கும் மக்கள் தங்களுக்கான எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்வர். இங்கு வாழ்க, ஒழிக கோஷங்கள் கேட்கமுடியாத ஒன்று.

ஆதிக்கம் செலுத்தும் சுயேட்சை வேட்பாளர்கள்

40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் தற்போது தேசிய அளவில் பாஜக கூட்டணியில் உள்ள மிசோ தேசிய முன்னணியின் ஜோரம்தங்கா முதலமைச்சராக உள்ளார்.

இம்மாநிலத்தில் மும்முனைத் தேர்தல் என்றே கொள்ளலாம். மாநில கட்சியான மிசோ தேசிய முன்னணியும், தேசிய கட்சியான காங்கிரஸும் ரேசில் முந்துகின்றன. கடந்த 30 ஆண்டுகளாக இந்த இரு கட்சிகளே மாறி மாறி ஆட்சியை பிடித்துள்ளன. தற்போது களத்தில் குதித்திருக்கும் ஜோரம் மக்கள் இயக்கமும் துருப்புச் சீட்டாக இருக்கும் என நம்பப்படுகிறது.

தற்போது உள்ள மிசோரம் தேசிய முன்னணி அரசுக்கு சட்டசபையில் 26 உறுப்பினர்கள் உள்ளனர். 11 லட்சம் மக்கள் தொகை மட்டுமே உடைய ஒரு மாநிலத்தில் 40 தொகுதிகள் உள்ளதால் ஒரு தொகுதிக்கு 28 ஆயிரம் மக்களே எனும போது சுயேட்சை வேட்பாளர்களின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. ஆனால் 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 8 சுயேட்சை வேட்பாளர்கள் ஜோரம் மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள். தேர்தல் நடந்தபோது அக்கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத நிலையில் அக்கட்சியின் வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர்.

லால்துஹோமா
லால்துஹோமா

அவர்களில் அக்கட்சியின் தலைவரான லால்துஹோமா 2021-ஆம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கத்தின் சார்பில் வெற்றி பெற்றார். எனவே மற்ற 5 எம்.எல்.ஏ.க்கள் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட பிரதமர் மோடியின் பிரச்சாரம்

மிசோரம் மாநிலத்தில் வெளியாகி இருந்த கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் தொங்கு சட்டசபையே அமையும் என தெரிவித்திருந்தது. அப்படி தொங்கு சட்டசபை அமைந்தால் பாஜக, ஜோரம் மக்கள் இயக்கத்தினருடன் கூட்டணி வைப்பதற்கான முடிவில் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது ஜோரம் மக்கள் இயக்கத்தின் செயல் தலைவர் சப்தங்கா பாஜக உடனான கூட்டணிக்கு இடமில்லை என அறிவித்துள்ளார்.

அதே சமயத்தில் தேசிய அளவில் பாஜக கூட்டணியில் தற்போது இருக்கும் மிசோ தேசிய முன்னணியும் பாஜகவிடம் இருந்து சற்றே ஒதுங்கியே உள்ளது. அக்காட்சியின் தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான ஜோரம்தங்கா, தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் மேடையை பகிர்ந்து கொள்ளமாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். காரணத்தை கண்டறிவது மிக சுலபம். மணிப்பூரில் நடந்த வன்முறை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மிசோரம் மாநிலத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். மணிப்பூரில் ஏராளமான தேவாலயங்களுக்கு தீ வைத்தது பெரும்பான்மை கிறிஸ்தவர்களாக இருக்கும் மிசோரம் மக்களையும் பாதித்துள்ளது.

மத்திய அரசு முயற்சித்திருந்தால் மணிப்பூரில் அமைதியை கொண்டு வந்திருக்கலாம். அது அவ்வளவு கடினமான காரியம் அல்ல என்பது ஆளும் தரப்பின் வாதம். முதலமைச்சரின் இந்த கருத்துக்கு பின் மிசோரம் மாநிலத்தில் அக்டோபர்30 ஆம் தேதி நடக்க இருந்த பிரதமர் மோடியின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மட்டுமே பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதேசமயத்தில் மத்தியில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில்தான், மிசோ தேசிய முன்னணி அங்கம் வகிப்பதாகவே அக்கட்சி தெரிவித்துள்ளது. மத்தியில் இரண்டே கூட்டணிதான் எனும்போது காங்கிரஸ் கட்சியுடன் எங்களால் ஒட்ட முடியாது என்கின்றனர் மிசோரம் தேசிய முன்னணி கட்சியினர். எனவே மாநில அளவில் தற்போது நிர்கதியாக பாஜக நிற்கிறது என சொன்னால் அது மிகையாகாது.

23 தொகுதிகளில் மட்டுமே கவனம்

மிசோரம் தேர்தல் களம் குறித்து பேசிய மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜூஜூ, “40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைக் கொண்டிருந்தோம். ஆனால் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைக் கொண்டுள்ளது ஒரு புறம் என்றால் வெற்றி பெறும் வேட்பாளர்களைக் கொண்டுள்ளது மற்றொரு புறம். எனவே 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதை விடுத்து 23 தொகுதிகளில் கவனம் செலுத்த உள்ளோம்” என தெரிவித்திருந்தார்.

2018-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 39 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர் புத்த தன் சக்மா. இவர் 2013-ஆம் ஆண்டு தேர்தலில், காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்று காங்கிரஸ் அமைச்சரவையிலும் இடம் பிடித்தவர். 2018-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்துவிலகி பாஜகவில் இணைந்தார். 2018-ஆம் ஆண்டு தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் தேர்தல் அரசியலில் இருந்து, தான் விலகப்போவதாக சக்மா அறிவித்தது பாஜகவின் தலையில் இடியை இறக்கியதுபோல் இருந்தது. அவருக்கு பதிலாக தற்போது துரியா தன் சக்மாவை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.

பாஜக மிசோரம் மாநிலத்தில் 3 பேரை நம்பியுள்ளது. சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் லால்ரினிலியானா சைலோ, கட்சியின் ஆலோசகராக இருந்த லானெந்தங்கா, முன்னாள் அமைச்சர் பெய்ச்சுவா. இதைத் தாண்டி சிறும்பான்மை சமூகமான ப்ரூ, சக்மா, லாய், மாரா மக்கள் அதிகம் வசிக்கும் 4 மாவட்டங்களையும் பாஜக தனக்கான இடமாக பார்க்கிறது. சமீபத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டது. அரசு வேலைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் குடும்பத்தின் மருத்துவக் காப்பீடுத் திட்டம் ரூ.5 லட்சத்ட்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் போன்ற வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.

மிசோ தேசிய முன்னணி

ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணி மாநிலத்தில் வலுவான கட்சியாக உள்ளது. தலைவர் ஜோரம்தங்கா இதுவரை 6 முறை எல்.எல்.ஏவாக தேர்வானவர். 7 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கிறார். மிசோ தேசிய முன்னணி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு பகுதியாக இருந்தாலும் மாநிலத்தில் பாஜவிடம் இருந்து சற்றே விலகியே உள்ளார்.

மிசோரம் தேசிய முன்னணியின் மிக முக்கிய வாக்குறுதியாக பார்க்கப்படுவது, ஜோஃபோஸ் மக்களை ஒரே அரசாங்கத்தின் கீழ் ஒன்றிணைப்போம் என்பதே. ஜோ மக்கள் குறித்து அவரே விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதன்படி, மிசோரத்திலுள்ள மிசோ மக்கள், மணிப்பூரில் உள்ள குகி மக்கள், மியான்மரில் உள்ள சின்ஸ் மக்கள், பங்களாதேஷில் உள்ள சிட்டகாங் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் போன்றவர்களை ஒரே அரசாங்கத்தின் கீழ் ஒன்றிணைப்போம் என தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு பிராந்திய கட்சி மற்ற நாடுகளிலுள்ள மக்களை எப்படி ஒன்றிணைப்ப்பார் என்பதை சொல்லவில்லை.

காங்கிரஸ்

காங்கிரஸ் இந்த பிரச்னைகளை எல்லாம் புறக்கணிச்ச்சிருக்கு. மற்ற மாநிலங்களில் கொடுக்கும் வாக்குறுதிகளைப்போலவே மிசோரத்திலும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. கேஸ் சிலிண்டரை ரூ.750க்கு கொடுப்போம்,ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம், அரசு அதிகாரிகள் இல்லாத சாதாரண குடும்பக்களுக்கு ரூ. 15 லட்சம் வரை உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும் போன்ற வாக்குறுதிகளை காங்கிரஸ் முன் வைத்துள்ளது.

மிசோரம் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக லால்சவ்தா பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு மாநிலத்தில் ஊழலற்ற இமேஜ் இருப்பதால் மக்கள் மத்தியில் இவரது வாக்குறுதிகள் எடுபடும் என்றே சொல்லலாம்.

2008 முதல் 2018-ஆம் ஆண்டு வரை மிசோரம் மாநிலத்தின் நிதியமைச்சராகவும் இருந்துள்ளதால் ஒரு நிர்வாகியாவே கட்சியை மீட்டுருவாக்கம் செய்து வருகிறார். இவர் தலைமையிலான மாநில காங்கிரஸ் மீது தேசிய காங்கிரஸ் பெரிதும் நம்பிக்கையை வைத்துள்ளது.

ஜோரம் மக்கள் இயக்கம்

ஜோரம் மக்கள் இயக்கம் 2017 ஆம் ஆண்டு 2 அரசியல் கட்சிகள் மற்றும் 5 குழுக்களை இணைத்து உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி. காங்கிரஸ், மிசோரம் தேசிய முன்னணி இல்லாத ஒரு ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே அவர்களது பிராதன நோக்கம். கட்சியின் தலைவர் லால்துஹோமா, கட்சி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகளுக்குள் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என நம்பிக்கையோடு தேரிவிக்கிறார்.

2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்காததால் இதன் வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டார்கள். அதில் 8 பேர் வெற்றி பெற்றனர். பல தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை மூன்றாவது இடத்திற்கு தள்ளியது ஜோரம் மக்கள் இயக்கம்.

ஊழலற்ற ஆட்சியை வாங்குவோம் என்பது இக்கட்சியின் பிரதான கொள்கை. மாநிலத்தில் பெரும்பான்மை வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என இக்கட்சியினர் கூறினாலும், தொங்கு சட்டசபை அமைந்தால் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவிக்கின்றனர்.

முன்பே தெரிவித்தது போல் தொங்கு சட்டசபை அமைக்கப்பட வாய்ப்புகள் இருந்தாலும் ஜோரம் மக்கள் இயக்கம் வளர்ச்சி பெறும் என்றும் காங்கிரஸ் கட்சி இழந்த வாக்குகளை மீண்டும் பெறும் என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com