‘ஏறு தழுவுதல்’ ‘சல்லிக்கட்டு’: சங்க இலக்கியம் To நவீன நாவல்! தமிழர் வாழ்வில் ஜல்லிக்கட்டு கலாசாரம்!

சங்க காலம் முதலே பண்டைய தமிழர் வாழ்வில் இணைந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து, இக்கட்டுரையில் காண்போம்.
ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டுட்விட்டர்

தமிழர் வாழ்வுடன் இணைந்த ஜல்லிக்கட்டு

இந்தியாவில் பண்டிகைகளுக்கும், பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் எப்போதுமே பஞ்சமிருக்காது. பெரும்பாலும், பண்டிகைகளுடன் இணைந்துவருவது இந்த வீர விளையாட்டுகள்தான். அதிலும் தமிழர்களின் பெருமைபேசும் பல பாரம்பரிய விளையாட்டுகள் இன்றும் பயணிக்கின்றன. அதில் ஒன்றுதான், ஜல்லிக்கட்டு.

இது, எருது விடுதல், ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்று பலவாறு அழைக்கப்படும். தமிழா்களின் இந்த பாரம்பரிய விளையாட்டு 5,000 ஆண்டுகள் தொன்மை கொண்டிருக்கிறது. பண்டைக் காலத்தில் தமிழா்களின் வீரத்தை நிலைநாட்டுகிற மாண்புகளில் ஒன்றாக ஜல்லிக்கட்டு இருந்துள்ளது. விஜயநகர நாயக்கா்களின் ஆட்சியின்போது ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயா் உருவானது. அதற்கு முன்பு ‘ஏறு தழுவுதல்’ என்ற பெயரே இருந்துள்ளது.

’ஜல்லிக்கட்டு’ என்பது  என்ன?

‘சல்லி’ என்பதன் திரிபே ‘ஜல்லி’ என வழங்கப்படுகிறது. காளையின் கொம்பில் சல்லிக் காசுகள் கட்டப்படுவதால் அது ‘சல்லிக்கட்டு’ என அழைக்கப்பட்டு பின்னா் ‘ஜல்லிக்கட்டு’ என்று திரிந்தது. அதாவது, இவ்விளையாட்டில், காளைகளின் கொம்புகளில் சில்லறைக் காசுகளைக் கட்டி ஓடவிடுவர். அவற்றை அடக்கி, அக்காசுகளை அவிழ்த்தெடுப்பதே ஜல்லிக்கட்டு ஆகும். அந்த வழியில் தற்போது நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் பலவித மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

நாகரிகத்திலும் சங்க இலக்கியத்திலும் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு

எனினும், பழங்காலத்தில் ‘ஏறு தழுவுதல்’ என்ற பெயரில் அழைக்கப்பட்ட இவ்விளையாட்டில், காளையை அடக்குபவருக்கு, பெண்களை மணமுடித்தும் கொடுக்கும் பழக்கமும் வழக்கத்தில் இருந்துள்ளது. பழமையான நாகரிகங்களிலும், சங்க இலக்கியங்களிலும் ஏறு தழுவுதல் விளையாட்டு நடைபெற்றதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சிந்துவெளி நாகரிக அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில், வீரனைக் கொம்பால் குத்தி எறியும் காட்சியும், வீரன் ஒருவன் நீண்ட வேல் போன்ற கழியை தன் வலக்கையில் ஏந்தி எருதுவின் பிடரியில் தாக்கும் சித்திரங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களில், கலித்தொகை, மலைபடுகடாம், பெரும்பணாற்றுப்படை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் ஏறு தழுவதல் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

மலைபடுகடாமில் இடம்பெற்ற ஏறுதழுவுதல்!

”இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு

மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை

மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்

கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப

வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய

நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை”

- என்கிறது மலைபடுகடாம்.

”ஓஒ! இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர்

அல்லால் திருமாமெய் தீண்டலர்”

- எனவும்,

”கொல்லேற்றுக் கோடுஅஞ்சு வானை

மறுமையும் புல்லாளே ஆய மகள்

- எனவும் கலித்தொகை உரைக்கிறது.

”காரி கதனஞ்சான் பாய்ந்தானைக்

காமுறுமிவ் வேரி மலர்க் கோதை யாள்"

- எனவும்

"நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப்

பொற்றொடி மாதராள் தோள்"

- என சிலப்பதிகாரமும் ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து எடுத்தியம்புகின்றன.

காளையை அடக்கும் ஆண்களுக்கே மணமுடித்த குறிப்புகள்!

இந்த பாடல்களில் காளைகள், பெண்களின் கேலி கிண்டல்கள், பெற்றோரின் மனஇயல்புகள் ஆகியன விவரிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, கலிப்பாடலில் ஆயர்குல பெண்களை மணமுடிக்க வேண்டுமெனில் அவ்வின இளைஞர்கள் கட்டாயம் காளைகளை அடக்க வேண்டும் எனக் கூறப்பட்டு உள்ளது.மேலும் முல்லை, மருதம் நில காளைகள் பங்கேற்கும் இந்த வீர விளையாட்டை தமிழக பெண்களும் ’குரவைக்கூத்து’ என்ற நாட்டுப்புறப்பாடல் வாயிலாகப் பாடியுள்ளனர்.

ஜல்லிக்கட்டு பற்றி சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவல்!

ஜல்­லிக்­கட்டை அடிப்­டை­யா­கக் கொண்டு எழு­தப்­பட்ட நாவல் வாடி­வா­சல். எழுத்­தா­ளர் சி.சு.செல்­லப்­பா­வின் இந்த படைப்பை திரைப்­ப­டமாக்­கு­கி­றார் இயக்குநர் வெற்­றி­மா­றன். 1959இல் முழுக்கமுழுக்க ஜல்லிக்கட்டை மட்டுமே மையமாக வைத்து வாடிவாசல் நாவலை, காலஞ்சென்ற எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதியிருப்பதாகப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

வீரர்களுக்கும்  காளைகளுக்கும் வழங்கப்படும் பரிசுகள்!

இப்படி, பண்டையக் காலம்தொட்டே விளங்கும் ஜல்லிக்கட்டு, இன்றும் தென் தமிழகத்தின் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் பண்பாட்டுத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டுக்காகவே காளைகள் தோ்ந்தெடுக்கப்பட்டு அதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு காளையை ஒன்றுக்கு மேற்பட்ட வீரா்கள் அடக்கிவிட்டால் அவா்கள் யாருக்கும் வெற்றியில்லை என்று அறிவிக்கப்படுகிறது. ஒருவேளை, காளையை எவரும் அடக்கவில்லை என்றால் காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. போட்டியில் பங்குகொள்ளும் அனைத்துக் காளைகளும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்பே களத்தில் இறக்க அனுமதிக்கப்படுகின்றன. போட்டியில் வென்ற வீரா்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்படுகின்றன.

விலங்கு நல ஆர்வலர்கள் தொடுத்த வழக்கு!

ஆனால், இதுபோன்ற விளையாட்டில் காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன என விலங்கு நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வழக்கு தொடர்ந்தனர். இதற்கு எதிராக நாடு முழுவதும் புரட்சி வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புரட்சிக்குப் பின்னர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, கடந்த 2017ஆம் ஆண்டு அவசர சட்டம் இயற்றப்பட்டு, அதுமுதல் மீண்டும் புத்துணர்வுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான போட்டிகள் நாளை(ஜன.6) முதல் நடைபெற இருக்கின்றன.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு புதிய அரங்கம்!

இந்த நிலையில், இதுவரை ஜல்லிக்கட்டுக்கு மிகவும் புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வாடிவாசலில் போட்டிகள் நடைபெற்று வந்தன. தற்போது, அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் 66.8 ஏக்கரில் ரூ.44 கோடியில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில் இந்த அரங்கம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த வருடம் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் இங்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com