மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்., ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி பரப்புரை.. போலீஸ் தடியடி.!
பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ள மகாராஷ்டிராவில், மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வருகிற ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக, மகாராஷ்டிர அரசியல் கட்சிகள் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசியின் பரப்புரைக் கூட்டம் மகாராஷ்டிர மாநிலம், அகோலா மாவட்டத்தில் உள்ள சுல்பிகர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அசாதுதீன் ஓவைசி உரையாற்றிக் கொண்டிருந்தபோது உற்சாகமடைந்த அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள், மேடையை நோக்கி முண்டியடித்துக் கொண்டு முன்னேற முயன்றனர். இதனால் மேடையருகே கடும் நெரிசலும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
தொடர்ந்து, இக்கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பலமுறை எச்சரிக்கை விடுத்தும், தொண்டர்கள் கலைந்து செல்லவில்லை. நிலைமை மோசமடைவதைத் தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஓவைசி, "இது மக்களின் அன்பு" என்று குறிப்பிட்டார். பின்னர் நிலைமை சீரானதைத் தொடர்ந்து அவர் தனது உரையைத் தொடர்ந்தார்.
தொடர்ந்து இக்கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து காவல்துறையினர், ”கூட்டம் அதிகமாக இருந்ததால், இக்கூட்டத்தை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளனர்.

