“உலக பட்டினிக் குறியீடு” கிண்டலாக பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

“இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களில் 3000 மக்களை தொலைபேசிகளில் அழைத்து உங்களுக்கு பசிக்கிறதா என கேட்டு அட்டவணையை தயாரிக்கின்றனர்" ஸ்மிருதி இரானி
Smriti Irani
Smriti Iranipt web

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கன்சரன் வேர்ல்ட்வைட் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே ஆகிய நிறுவனங்கள் சர்வதேச உணவுப் பற்றாக்குறை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து உலகளாவிய பசிக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.

இதில் நடப்பாண்டில் இந்தியா 28.7 மதிப்பெண்களைப் பெற்று 111 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 125 நாடுகள் அடங்கிய பட்டியலில் இந்தியா 111 ஆவது இடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் 107 ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 4 இடங்கள் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், ஸ்ரீலங்கா போன்ற நாடுகள் முறையே 102, 981, 69, 60 போன்ற இடங்களில் உள்ளன.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஹைதராபாத்தில் Federation of Indian Chambers of Commerce and Industry (FICCI) சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில் கலந்து கொண்டார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற இம்மாநாட்டில் பேசிய ஸ்மிருதி இரானி, “எந்த குறியீடுகளாலும் இந்தியாவின் உண்மையான நிலவரத்தை குறிப்பிட முடியாது. உதாரணமாக குளோபர் ஹங்கர் இண்டெக்ஸை பல்வேறு மக்களும் முட்டாள்தனமானது என்கின்றனர்.

அவர்கள் எப்படி குறியீடுகளை உருவாக்குகிறார்கள் தெரியுமா? இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களில் 3000 மக்களை தொலைபேசிகளில் அழைத்து உங்களுக்கு பசிக்கிறதா என கேட்டு இவர்கள் அட்டவணையை தயாரிக்கின்றனர். நான் காலை 4 மணிக்கு டெல்லியில் எனது வீட்டில் இருந்து கிளம்பினேன். 5 மணிக்கு கொச்சிக்கு விமானம் வந்தது. கொச்சியில் எனக்கு மாநாடு இருந்தது. மீண்டும் 5 மணிக்கு விமானம் பிடித்து இந்த (ஹைதராபாத்) நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். இதுபோன்ற நேரங்களில் எனக்கு உணவு போன்ற எது கிடைப்பதற்கும் 10 மணி ஆகும். இது போன்ற நாள்களில் எனக்கு எந்த நேரத்தில் போன் செய்து உங்களுக்கு பசிக்கிறதா என கேட்டாலும், நான் ஆமாம் என்றுதானே சொல்வேன். ஆனால் அதற்கு அர்த்தம் இந்தியாவின் பட்டினி குறியீடு உயர்வென்பதா

அந்த குறியீட்டில் பாகிஸ்தான் இந்தியாவை விட முன்னிலையில் இருப்பதாக கூறுகிறது. உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?” என பேசியுள்ளார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். பொறுப்பற்ற பேச்சு என்றும், பட்டினி குறையீட்டை மத்திய அமைச்சர் ஒருவர் இந்தளவுக்கு உதாசீனப்படுத்துவது ஆபத்து என்றும் விமர்சனங்கள் எழுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com