உத்தரப் பிரதேசத்தை 4 மாநிலங்களாக பிரிக்க திட்டம்? அமைச்சர் பேச்சால் மீண்டும் எழுந்த விவாதம்!
உத்தரப் பிரதேசத்தை நான்கு மாநிலங்களாகப் பிரிக்கும் விவகாரம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுதொடர்பாக பேசிய அம்மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பார், எதிர்காலத்தில் உத்தரப் பிரதேசம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்புக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பிரதமர் மோடி இதுகுறித்து உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பூர்வாஞ்சல், மத்தியாஞ்சல், புந்தேல்கண்ட் மற்றும் ஹரித் பிரதேசம் என நான்கு மாநிலங்களாகப் பிரிக்கலாம் என ராஜ்பார் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, 2011ஆம் ஆண்டு மாயாவதி தலைமையிலான அரசு, உத்தரப் பிரதேசத்தை நான்கு மாநிலங்களாகப் பிரிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அரசியல் காரணங்களால் அந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. 2027ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் சூழலில், அமைச்சர் ராஜ்பாரின் இந்தக் கருத்து உத்தரப் பிரதேச அரசியலில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

