கொல்கத்தா| காற்றில் ஆடிய மெஸ்ஸி சிலை.. 70 அடி சிலைக்கு கயிறு கட்டி பாதுகாப்பு.!
இந்திய கால்பந்தின் தலைநகர் என அழைக்கப்படும் அளவுக்கு கால்பந்து விளையாட்டு கொல்கத்தா மக்களிடையே பிண்ணிப் பிணைந்துள்ளது. மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற கால்பந்து ஜாம்பவான்களுக்கு ஏராளமான ரசிகர்கள் அம்மாநிலத்தில் உண்டு. இந்தசூழலில் தான், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோட் டூர் 2025 (GOAT Tour 2025) என்ற பெயரில் 3 நாள் சுற்றுப் பயணமாக லியோனல் மெஸ்ஸி இந்தியா வந்திருந்தார்.
அப்போது, கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் புது தில்லி ஆகிய நகரங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அவருக்கு, கொல்கத்தாவின் லேக் டவுன் பகுதியில் உள்ள ஸ்ரீ பூமி ஸ்போர்ட்டிங் கிளப்பில் கால்பந்து உலகக்கோப்பையை கையில் வைத்திருப்பது போன்ற மெஸ்ஸியின் 70 அடி உயர சிலை திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மெஸ்ஸி தனது சிலையை திறந்து வைத்திருந்தார்.
இந்த சிலையை 45 தொழிலாளர்கள் இணைந்து வெறும் 27 நாட்களில் உருவாக்கியதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில்தான், கடந்த மே 25-ஆம் தேதி பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக சிலை காற்றில் அசைவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அம்மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிலைக்கு முதற்கட்டமாக நைலான் கயிறு கட்டி பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்தசூழலில் தான், தற்போது சிலையிலுள்ள திருகுகள் தளர்ந்திருப்பதையும், அதன் அடித்தளம் வலுவிழந்திருப்பதையும் பொதுப்பணித் துறை கண்டறிந்தது. பருவமழைக் காலத்தில் இது விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், இதனை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்த சிலை விரைவில் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெஸ்ஸி சிலை திறந்து 6 மாதங்கள் கூட முழுதாக முடிவையாத நிலையில், இதன் கட்டமைப்பு குறித்தான கேள்வியை மக்கள் எழுப்பி வருகின்றனர்.
முன்னதாக, மெஸ்ஸியின் இந்தியா வருகையின் போது, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸி கலந்து கொண்டார். இதில் ரசிகர்கள் பங்கேற்பதற்காக பல ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட நிலையில் வெறும் 20 நிமிடம் மட்டுமே மெஸ்ஸி கலந்து கொண்டதாகவும், அவரை சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் இருந்ததால் தங்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் ரசிகர்கள் விளையாட்டு அரங்கத்தை சூறையாடியிருந்தனர். பின்னர் போலீசார் தடியடி நடத்தி ரசிகர்களை கலைத்த நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான அப்போதைய மேற்கு வங்க அரசு ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியிருந்தது.
இவ்வாறு, 6 மாதங்களைக் கடந்து ஏதோவொரு வகையில், மெஸ்ஸியின் இந்திய வருகை அம்மாநிலத்தில் பேசுபொருளாகி வருகிறது.

