இது அசைவ பிரியாணிங்க... பில்லைத் தவிர்க்க நாடகமாடிய இளைஞர்!
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில், உணவகத்தில் வெஜ் பிரியாணியில் அசைவ எலும்பை வைத்து நாடகமாட முயன்ற இளைஞர்கள் சிசிடிவி மூலம் சிக்கியுள்ளனர்.
எட்டு முதல் பத்து பேர் கொண்ட ஒரு குழு உணவகத்திற்குச் சென்று வெஜ் பிரியாணி மற்றும் அசைவ பிரியாணியை ஆர்டர் செய்துள்ளனர். அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட சிறிது நேரத்திலேயே, அவர்களில் ஒருவர் தனது வெஞ் பிரியாணியில் எலும்பு இருப்பதாகக் கூச்சலிட்டுள்ளார் .
இருப்பினும், தனது சமையலறையில் அசை உணவுகள் தனித்தனியாக சமைக்கப்படுவதால் இப்படி ஏற்பட்டிருக்க வாய்ப்பும் இல்லை என்று உணவக உரிமையாளர் ரவிகர் சிங் தெரிவித்துள்ளார். ஆனால், இதனை மறுத்த அந்த இளைஞர்கள் கூட்டம், தொடர்ந்து கூச்சலிட்டு கொண்டிருந்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில்,வேண்டுமென்றே இளைஞர்கள் நாடகமாடியது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது.
பின்னர், இதுகுறித்து காவல்துறையிடம் தெரிவித்த உணவக உரிமையாளர் ரவிகர் சிங் "அவர்கள் ₹ 5,000-6,000 வரையிலான பில் தொகையை செலுத்துவதைத் தவிர்க்க விரும்பினர் என்பது தெளிவாகத் தெரிகிறது . அவர்களின் செயல்கள் முற்றிலும் வேண்டுமென்றே செய்யப்பட்டவை" என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜூலை 31 ஆம் தேதி இரவு கண்டோன்மென்ட் காவல் நிலையப் பகுதியில் உள்ள சாஸ்திரி சௌக்கில் உள்ள பிரியாணி உணவகத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததுள்ளது. சுமார் 5,000 ரூபாய் மதிப்பிலான உணவுக்கான பில்லைத் தவிர்ப்பதற்காக இந்த நாடகத்தை அவர்கள் அரங்கேற்றியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.