எதிர்கட்சிகளின் கூட்டம்; விசிக வைத்த முன்மொழிவுகள்; எதிர்கட்சி பிரதிநிதி குழுவின் முதல்வேலை என்ன?

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் இரண்டாவது நாளாக இன்று நடந்து வரும் சூழலில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.
Thirumavalavan
Thirumavalavanpt desk

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஆளும் பாஜக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இரண்டாம் முறையாக பெங்களூருவில் கூடியுள்ளது.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், தொடர்ச்சியாக ஆளும் பாஜக அரசை எதிர்க்கும் கட்சிகளை ஒன்றிணைத்து பாட்னாவில் எதிர்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இக்கூட்டத்தில் 15 கட்சிகள் கலந்து கொண்டன.

பாட்னா கூட்டம்
பாட்னா கூட்டம்ANI

இந்நிலையில் காங்கிரஸ் சமீபத்தில் ஆட்சி அமைத்த கர்நாடகத்தில், காங்கிரஸ் தலைமையில் இரண்டாவது முறையாக எதிர்கட்சித்தலைவர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை பகீரங்கமாக அறிவித்தால் மட்டுமே எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இவ்வேளையில் கடந்த ஞாயிறன்று காங்கிரஸ் கட்சி, டெல்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பான அவசர சட்டத்திற்கு எதிரான தனது நிலைப்பாட்டை அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியும் எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்தது.

எதிர்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றே பெங்களூரு சென்ற நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் மாலை எதிர்க்கட்சித் தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பு நடத்தபடும் என அறிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி சில முன்மொழிவுகளை முன் வைத்தது.

Thirumavalavan
Thirumavalavanpt desk

அதில் தீர்மானத்திற்கான முன்மொழிவுகளாக, “மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரம் குறித்து நேரில் பார்வையிட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை அனுப்ப வேண்டும். பொது சிவில் சட்ட மசோதாவை தற்போது துவங்க உள்ள மழைக்கால கூட்டத் தொடரில் பாஜக அரசு கொண்டுவரும் என்ற அச்சம் உள்ளது. இப்போது பொது சிவில் சட்டம் விரும்பத்தக்கதும் அல்ல அவசியமானதும் அல்ல என்ற முடிவை இக்கூட்டம் நிறைவேற்ற வேண்டும். இங்கு வந்துள்ள கட்சிகள் யாவும் பொது சிவில் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் ஒருமித்த நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.

குறைந்த பட்ச செயல் திட்டத்தில் சேர்ப்பதற்கான முன்மொழிவுகளாக, “முதலாவதாக மாநில உரிமைகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கும் இன்றைய சூழலில் மத்திய மாநில உறவுகள் குறித்தும், ஆளுநர் பதவி குறித்தும் சர்க்காரியா கமிஷன்( sarkaria commission) மற்றும் பூஞ்ச்சி கமிட்டி (punchhi committee ) ஆகியவை அளித்த பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றுவோம் என குறைந்தபட்ச செயல் திட்டத்தில் உள்ளடக்க வேண்டும்.

2. 2026 க்கு பிறகு தொகுதி மறு வரை செய்யும் போது தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதை எல்லோரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். தற்போதைய நிலை மாறாமல் தொகுதி மறுவரை செய்வதற்கு ஏற்ப வழிவகை செய்யப்படும் என்பதை குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

3. எஸ்சி, எஸ்டி, ஓ பி சி மக்களின் நியாயமான பிரதிநிதித்துவம் ( fair representation) என்பது கல்வி வேலை வாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் எட்டப்படாத நிலையே உள்ளது. அவர்களின் மக்கள் தொகைக்கேற்ப நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் விதமாக சட்டப் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என்பதை குறைந்தபட்ச செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.

4. மதச் சிறுபான்மையினருக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்பை உறுதி செய்து கல்வி, வேலைவாய்ப்பு, சட்டம் இயற்றும் அவைகள் ( legislature ) ஆகிய தளங்களில் அவர்களது நியாயமான பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படும் என்பதையும் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் உள்ளடக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

5. மகளிர் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நியாயமான பங்கேற்பை பெண்களுக்கு உறுதி செய்யவும் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் வாக்குறுதி அளிக்கப்பட வேண்டும்.

6. தற்போதைய ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக நாட்டில் வறுமையும் வேலையின்மையும் அதிகரித்திருக்கிறது. எனவே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச வருமானத்தை அரசே அளிக்க வேண்டிய தேவை உள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் முன்னுதாரணமாகக் கொள்ளத் தக்கவை. இந்தியா முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு குறைந்தபட்ச மாத வருமானத்தை அரசே உறுதி செய்வதற்கு குறைந்தபட்ச செயல்திட்டத்தில் வழிவகை செய்யப்பட வேண்டும்” போன்றவை குறைந்த பட்ச செயல் திட்டத்தில் சேர்ப்பதற்கான முன்மொழிவுகளாக வைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com