கர்நாடகா: sterilize செய்யப்படாத உபகரணங்கள்.. சுத்தமாக பராமரிக்கப்படாத OT.. 3 உயிர்களை பறித்த நிகழ்வு

கர்நாடகாவில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட மூன்று பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
3 பெண்கள் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் போராட்டம்
3 பெண்கள் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் போராட்டம்pt web

கர்நாடகாவில் துமகூர் மாவட்டம் பாவகடா தாலுகா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்ட மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் மக்களின் தகவல்களின்படி, கடந்த வெள்ளிக்கிழமை 7 பெண்களுக்கு கருத்தடை, கருப்பை நீக்கம் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகள் செய்தனர்.

இதில் 40 வயதான அனிதா வெள்ளிக்கிழமை இரவு இறந்ததாகவும், கருப்பை தொற்றுக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்ட 40 வயதாகும் நரசம்மா சனிக்கிழமை இறந்ததாகவும், இரண்டாவது குழந்தையைப் பெற்ற 24 வயதான அஞ்சலி கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் அவரும் உயிரிழந்தார்.

மருத்துவர்களின் அலட்சியத்தால் மட்டுமே அவர்கள் உயிரிழந்ததாக கூறி, அவர்களது உறவினர்கள் மருத்துவமனைக்கு முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மகப்பேறு மருத்துவர் பூஜா, செவிலியர் பத்மாவதி, ஊழியர் கிரண் ஆகியோரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்ய கர்நாடக மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் ஆணையர் டி. ரந்தீப் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், குடும்ப நலத்துறையின் துணை இயக்குநர் சனிக்கிழமை மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தியதாகவும், ஆபரேஷன் தியேட்டரில் உள்ள தொற்று கட்டுப்பாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட விஷயங்களை ஆய்வு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்கள்
உயிரிழந்த பெண்கள்

முதற்கட்ட விசாரணையில் மருத்துவர் மற்றும் அவரது குழு அலட்சியமாக செயல்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் உபகரணங்கள், கிருமி நீக்கம் (sterilize) செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஆபரேஷன் தியேட்டர் சுத்தமாக பராமரிக்கப்படவில்லை. இது நோயாளிகளுக்கு நோய்த்தொற்று பரவ காரணமாக இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாவட்ட சுகாதார அதிகாரி மஞ்சுநாத் கூறுகையில், “மூன்று நோயாளிகளுக்கும் ஒரே ஆபரேஷன் தியேட்டரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதுவே ஆபரேஷன் தியேட்டர் மற்றும் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் தொடர்பான தூய்மை குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com