பெங்களூரு|துப்பாக்கி முனையில் 30 வினாடிகளில் ரூ.18 லட்சம் கொள்ளை!
பெங்களூருவில் உள்ள மாகடி சாலையில் கன்னையா லால் (46) என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இங்கு கடந்த வெள்ளிக்கிழமை (25.7.2025) இரவு 8.30 மணியளவில் கடையின் உரிமையாளர் லால் கடையை மூட தயாராகி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென 3 மர்ம நபர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு உள்ளே நுழைந்தனர். அதில் ஒரு நபர், தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து லாலையும் அங்கு இருந்த ஊழியரையும் மிரட்டியுள்ளார். மேலும், துப்பாக்கியை காட்டி மிரட்டி, கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.18 லட்சம் மதிப்புள்ள 185 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
ஒருபுறம் லால் உதவிக்காக அருகிலிருந்தவர்களை அழைக்க சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் சிலர் விரைந்துள்ளனர். ஆனால், அவர்களை தள்ளிவிட்டு கொள்ளையர்கள் வெளியேறியுள்ளனர்.
இதுகுறித்து கன்னையா லால் என்பவர் அளித்த புகாரின்பேரில் மதநாயக்கனஹள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து தெரிவித்துள்ள கடையின் உரிமையாளர் லால், "இரவு 8.30 மணியளவில், மூன்று குற்றவாளிகள் எங்கள் கடைக்குள் நுழைந்து, துப்பாக்கியைக் காட்டி, 30 வினாடிகளுக்குள், மேஜையில் இருந்த அனைத்தையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். சுமார் 180 முதல் 185 கிராம் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.
சினிமாவில் வரும் காட்சியை போல நடந்த இந்த சம்பவம் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை கண்டறியும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மேலும், கொள்ளையர்கள் தப்பிக்கும் வழி மற்றும் அவர்கள் பயன்படுத்திய வாகனம் ஏதேனும் இருந்தால், அவற்றைக் கண்டறியும் முயற்சியில் காவல் துறையினர் இறங்கியுள்ளனர். மேலும், அருகிலுள்ளவர்களிடத்திலும் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.