”கேம்ப்ரிட்ஜ் பல்கலை தேர்வில் தோல்வியடைந்தவர் ராஜிவ் காந்தி” - மணிசங்கர் அய்யர் சர்ச்சை பேச்சு!
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியும் மணிசங்கரும் இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்த நண்பர்கள். ராஜிவ்தான் மணி சங்கரை அரசியலுக்கு அழைத்துவந்தார். அண்மையில் ஒரு பாட்காஸ்ட் உரையாடலில் ராஜிவ் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட மணி சங்கர், அவர் பிரதமராக இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கைகளை ஆதரித்துப் பேசினார். அதேநேரம் அவர் பிரதமரானபோது “இரண்டு முறை தேர்வில் தோற்றவர் எப்படி பிரதமராக முடியும்” என்று ஆச்சரியப்பட்டதாக மணிசங்கர் கூறியுள்ளார்.
”கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத் தேர்வில் தோல்வி அடைவது முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதைவிடக் கடினம். ஏனென்றால் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் தனது நற்பெயரைப் பாதுகாப்பதற்காக அனைவரையும் எப்படியாவது தேர்ச்சி பெறவைத்துவிடுவார்கள்” என்றார். இதுதொடர்பாக பாஜகவின் அமித் மாலவியா, “திரைகள் விலகட்டும்” என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் கருத்துகளை மணிசங்கர் அய்யர் வெளியிட்டுவருவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சரண் சிங் சப்ரா விமர்சித்துள்ளார்.