மணிப்பூர் கலவரம், உச்ச நீதிமன்றம்
மணிப்பூர் கலவரம், உச்ச நீதிமன்றம்புதிய தலைமுறை

மணிப்பூர் விவகாரம்: விசாரணையின் தற்போதைய நிலவர அறிக்கையை கேட்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

மணிப்பூரில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை வழக்குகளை சிபிஐ விசாரிப்பதை மேற்பார்வை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிடம் இருந்து நிலவர அறிக்கையை கேட்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குக்கி மற்றும் மெய்தி இன மக்கள் இடையே இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதம் மோதல் வெடித்தது. அதிலும், மணிப்பூர் வன்முறையின்போது பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு வீடியோவாக வெளியான செய்தி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனினும் அந்த வன்முறை இன்னும் அணையாமல் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனையின் உச்சமாக இருக்கிறது.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்PTI

இந்த நிலையில், மணிப்பூரில் கடந்த மே மாதம் தொடங்கிய இனக்கலவரத்தில், இதுவரை 175 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க மணிப்பூர் மாநில அரசு முன்வந்திருக்கிறது. கலவரத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம், ஆசிட் வீச்சால் முகம் சிதைந்தவர்களுக்கு ரூ.8 லட்சம் என நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டும், வழக்கின் விசாரணையை மேற்பார்வையிடுவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டன.

இதற்கிடையில் இந்த வழக்கு விசாரணை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ’பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், விசாரணை தொடர்பாக சிபிஐயிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்காததால், விசாரணையை மேற்பார்வை குழுக்களிடம் இருந்து விசாரணை அறிக்கையை கேட்டுப் பெற வேண்டும்’ என வலியுறுத்தினார். ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உடனடியாக அறிக்கையை கேட்டுப்பெற மறுப்பு தெரிவித்து, வரும் செப். 25ஆம் தேதி விசாரணையை ஒத்திவைத்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com