மணிப்பூர் சர்ச்சை வீடியோ: 'குற்றவாளிகள் விரைவில் கைது' - மணிப்பூர் காவல்துறை உறுதி

மணிப்பூரில் பழங்குடியினப் பெண்கள் இருவர் சாலையில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
Manipur Police Station
Manipur Police StationGoogle Maps/Kiran Sng

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதலமைச்சர் பைரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தில் வசிக்கும் மைதேயி சமுதாயத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரி அரசிடம் கோரிக்கை விடுத்த நிலையில் இதற்கு மாநிலத்தின் சிறுபான்மையினரான `குக்கி' பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினரிடையே மோதல் வெடித்தது. இதையடுத்து நடந்த கலவரம் மற்றும் மோதல்களுக்கு 160 பேர் பலியாகினர்; 3,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அங்கு சுமார் 3 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்கின்றன. கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் மணிப்பூரில் அமைதி திரும்பிய பாடில்லை.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்PT

இதனிடையே மணிப்பூரில் குக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் குழு சாலையில் நிர்வாணமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்போக்பி மாவட்டத்தில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் இருவர் அந்தக் கும்பலால் கொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் குற்றச் செயலில் சுமார் 800 முதல் 1,000 பேர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது

பழங்குடியினரை பிரதிநிதித்துவப்படுத்தும் பழங்குடியினர் தலைவர்கள் மன்றம் (ITLF) பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் குகி-சோ பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளது. ஆனால், இக்கொடூர சம்பவம் மே 4ம் தேதி நடந்ததாகவும் அதன் வீடியோ தற்போது வைரலாகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மணிப்பூரில் இணையதள இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் இரண்டரை மாதம் கழித்து இச்சம்பவம் தாமதமாக தெரியவந்துள்ளது. இதனால் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பழங்குடியின பெண்களை சாலையில் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள மணிப்பூர் காவல்துறை, அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய குற்றவாளிகளுக்கு எதிராக தௌபால் மாவட்டத்தில் உள்ள நோங்போக் செக்மாய் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய மாநில காவல்துறை தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.

Manipur Police Station
'பிரதமரின் செயலற்ற தன்மையால் மணிப்பூரில் அராஜகம் நடக்கிறது' - ராகுல் காந்தி கொதிப்பு

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள இச்சம்பவத்தை இன்று நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதே சமயம், மே மாதம் நடந்த சம்பவம் எனில் இத்தனை நாட்களாக மணிப்பூர் காவல்துறையும், அரசும் ஏன் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யவில்லை என்கிற கேள்வியும் எழுகிறது.

https://www.puthiyathalaimurai.com/india/manipur-police-said-all-effort-to-arrest-culprits-as-regard-viral-video-taken

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com