”மணிப்பூரில் ஆட்சியமைக்க 44 எம்.எல்.ஏக்கள் தயார்” - ஆளுநரைச் சந்தித்தபின் Ex அமைச்சர் பேட்டி!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின. சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர்.
இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது. மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறை ஏற்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் அம்மாநிலத்தில் அமைதி திரும்பவில்லை.
இதற்கிடையே, மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக மணிப்பூர் மாநில முதல்வராக இருந்து பைரன் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பைரன் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவர் பதவி விலகினார். பைரன் சிங் பதவி விலகியதைத் தொடர்ந்து தற்போது மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது.
இந்த நிலையில், புதிய ஆட்சியை அமைக்க 44 எம்எல்ஏக்கள் தயாராக இருப்பதாக பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான தோக்சோம் ராதேஷ்யம் தெரிவித்துள்ளார். 9 எம்எல்ஏக்களுடன் தொக்சோம் ராதேஷ்யாம் இன்று ராஜ்பவனில் ஆளுநர் அஜய் குமார் பல்லாவை சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மக்கள் விருப்பப்படி புதிய ஆட்சியமைக்க 44 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர். இதை நாங்கள் ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். மணிப்பூரில் நிலவும் பிரச்னைகளுக்கான தீர்வு குறித்து ஆலோசனை நடத்தினோம். நாங்கள் சொன்னதை ஆளுநர் கேட்டுக்கொண்டார். மக்கள் நலனுக்கான நடவடிக்கையை அவர் தொடங்குவார். இருப்பினும், நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவிப்பது அரசாங்கத்தை அமைக்க உரிமை கோருவதற்கு சமம். புதிய அரசாங்கம் அமைப்பதை யாரும் எதிர்க்கவில்லை. ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக பாஜக மத்திய தலைவர்கள் முடிவு எடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் குக்கி சமூகத்தினர், மலைக் கிராமங்களுக்கான தனி நிர்வாகம்தான் அமைதிக்கான வழி எனத் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் மொத்தம், 60 தொகுதிகள் உள்ளன. ஆகவே 31 சட்டமன்ற இடங்களை பெறக்கூடிய கட்சி இங்கு ஆட்சி அமைக்கலாம். இதில், ஒரு இடம் தற்போது காலியாக உள்ளது. எனினும், பாஜக தலைமையிலான கூட்டணியில் 44 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் 37 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். ஆகையால், அவர்கள் ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை உள்ளது.