CJP | ”மத்திய அமைச்சரே பதவி விலகு” - அபிஜித் தலைமையில் போராட்டம்.. பேசியது என்ன?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின்போது கூறிய கருத்துகளின் பின்னணியில், அமெரிக்காவில் படித்து வரும் அபிஜீத் திப்கே என்பவரால் இன்ஸ்டா பக்கத்தில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’என்ற பக்கத்தைத் தொடங்கப்பட்டது. அதில் வேடிக்கையான பதிவுகள் பதிவிடப்பட்ட நிலையில், பலரும் அதனைப் பின்தொடரத் தொடங்கினர். ஒருகட்டத்தில், பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையே அது விஞ்சியது. இதனால், மத்திய அரசுக்கு தடை விதித்தது. எனினும், மீண்டும் அதே பெயரில் ஒரு புதுப் பக்கம் தொடங்கப்பட்டது. தவிர, அந்தப் பக்கமும் இணையத்தில் வேகம்பிடித்து வருகிறது. இந்தசூழலில், சமூக வலைதளங்களில் செயல்பட்டு வந்த இயக்கம் முதன்முறையாக களத்திற்கு வந்திருக்கிறது.
அதன்படி, நீட் வினாத்தாள் கசிவு, போட்டித் தேர்வுகள் மற்றும் சிபிஎஸ்இ தேர்வு விவகாரம் போன்ற கல்வித்துறையில் நிகழ்ந்திருக்கும் முக்கிய பிரச்னைகளை சுட்டிக்காட்டி மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். கரப்பான் பூச்சி கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர்.
இந்தப் போராட்டத்திற்காக, அமெரிக்காவில் இருந்து இன்று காலை அக்கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே டெல்லி திரும்பினார். இன்று காலை 8 மணிக்கு டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்த அவருக்கு, ஏராளமான இளைஞர் திரண்டு வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியேறும் போது, அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வைத்திருந்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் விவகாரத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டதுடன் அங்கு கூடியிருந்த இளைஞர்கள் மத்தியில் உரையாற்றியிருக்கிறார். அதில், ”தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால், சம்பத்தப்பட்டவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர். சிறைச்சாலைக்கு பயந்து எத்தனை நாட்களுக்கு நாம் பயந்து வாழ முடியும்? இந்த நாடு எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் சொந்தமானது அல்ல; இது நம் அனைவருக்கும் சொந்தமானது. இது நமது எதிர்காலம் குறித்த கேள்வி. இது நீண்டகால போராட்டம், எங்களது சமூக வலைதள பதிவுகளை நீக்கலாம். ஆனால், எங்களை துடைத்தெறிய முடியாது. தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார். ’
போராட்டத்தில் இருக்கும் இளைஞர்கள், ”எங்கள் உரிமை எங்களுக்கு வேண்டும், முறைகேடுகளை நிறுத்துங்கள். தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்” என்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆனி ராஜா (Annie Raja), நேரில் கலந்துகொண்டு தனது ஆதரவை தெரிவித்தார். அதேபோல, லடாக்கைச் சேர்ந்த பிரபல சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலரான சோனம் வாங்க்சுங், லே பகுதியிலிருந்து டெல்லிக்கு வருகை தந்து இன்று ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் இணைந்திருக்கிறார்.

