மணிப்பூர் | வன்முறைகளுக்கு மன்னிப்பு கேட்ட முதல்வர்.. அமைதி திரும்பும் என உறுதி!
மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த வருடம் (2023) தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி, போராட்டங்களில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர். அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க... அதன்பிறகு வன்முறைக் காடானது மணிப்பூர். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த வன்முறையில் கலவரங்களும் தீவைப்புச் சம்பவங்களும் அரங்கேறின.
சில நாட்கள் மணிப்பூர் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். இன்னும் பலர், அண்டை மாநிலங்களில் குடியேறினர். இதுபோக, பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதிகளில் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ, உலகையே பதறவைத்தது.
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இந்த வன்முறை, ஓராண்டைக் கடந்தும், இன்றளவும் முடிவுக்கு வரவில்லை. கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.
இந்த நிலையில், 'மாநிலத்தில் நடைபெற்றுவரும் வன்முறைக்கு மக்களிடம் மன்னிப்பு கோருவதாக, மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்றுவரும் வன்முறைகளுக்கு மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வரும் ஆங்கிலப் புத்தாண்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காகப் பாடுபடுவோம்.
அதேவேளையில், கடந்தகாலத்தை மன்னிக்கவும் மறந்துவிடவும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் கேட்டுக்கொள்கிறேன். மணிப்பூர் மக்கள் பலர் தங்களை வீடுகளையும் உறவுகளையும் இழந்துள்ளனர். இதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். கடந்த 3, 4 மாதங்களாக அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மாநிலத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் தொடர்பாக, பயோமெட்ரிக் பதிவு செயல்முறை நடைபெற்று வருகிறது. ஜனவரி 2025 முதல், சட்டவிரோத மக்கள்தொகைப் பெருக்கத்தைத் தடுக்க, ஆதார் இணைக்கப்பட்ட பிறப்புப் பதிவு அறிமுகப்படுத்தப்படும்.
வன்முறை தொடங்கியதில் இருந்து, கொள்ளையடிக்கப்பட்ட 6,000 ஆயுதங்களில், 3,000க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்னையை கையாள்வதில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இம்மோதலில், இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு புதிய வீடுகளை கட்டித்தர போதுமான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது ஏன்” என கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர், ”பிரதமர் மணிப்பூருக்குச் சென்று அதையே அங்கு ஏன் சொல்ல முடியாது? மே 4, 2023 முதல் அவர் நாடு மற்றும் உலகம் முழுவதும் ஜெட் விமானத்தில் பயணம் செய்தபோதும் அவர் வேண்டுமென்றே மாநிலத்திற்கு வருவதைத் தவிர்த்தார். மணிப்பூர் மக்களால் இந்தப் புறக்கணிப்பைப் புரிந்துகொள்ள முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.