உத்தரப்பிரதேசம்|5 வயது சிறுமிக்கு கோயிலில் நடந்த கொடூரம்!
ஆக்ராவின் ஜெகதீஷ்புரா பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குள் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சிகர செய்தி வெளியாகி அப்பகுதியையே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
மே 18 ஆம் தேதியன்று சிறுமி கோயில் அருகே விளையாடி கொண்டிருந்த போது இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட பவித்ரா, சிறுமியை கோயிலுக்குள் அழைத்து சென்று அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த பாட்டியை அந்த நபர் கீழே தள்ளிவிட்டு ஓட முயன்ற நிலையில், அருகிலிருந்த மக்கள் அவரை மடக்கிப்பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
சிறுமியின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பவித்ரா என்ற அந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கொடூரச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆக்ரா காவல் ஆணையம் தனது சமூக வலைதளப்பக்கத்தி வெளியிட்டுள்ள பதிவில், “ பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஒரு போதும் பொறுத்து கொள்ள முடியாது. இந்த விஷயத்தில் விரிவான விசாரணை நடந்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளது. மேலும், ஜெகதீஷ்புரத்தில் இந்த சம்பவம் நடந்ததாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.