உ.பி. | கும்பமேளாவிற்கு கணவருடன் சென்ற பெண் ஹோட்டல் ரூம்மில் ரத்த வெள்ளத்தில் மீட்பு - நடந்தது என்ன?
புதுடெல்லியை சேர்ந்த கணவன், மனைவி கும்ப மேளாவில் பங்கேற்க சென்றிருந்தநிலையில், ஹோட்டல் ரூம்மில் மனைவி கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
சரியாக பிப்ரவரி 19 ஆம் தேதி காலையில், ஜான்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆசாத் நகர் காலனியில் உள்ள ஹோட்டல் ஒன்றில், 40 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக பிரயாக்ராஜ் காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், குற்றம் நடைப்பெற்ற இடத்தை ஆய்வு செய்துள்ளனர். இறந்த கிடந்த பெண்ணின் கழுத்து கூர்மையான ஆயுதம் கொண்டு வெட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது, பிப்ரவரி 18 ஆம் தேதி இரவு அப்பெண் ஒரு ஆணுடன் தங்கும் அறைக்கு வந்ததாகவும், அவர்கள் இருவரும் கணவன் மனைவி என்றும் அடையாளம் காணப்பட்டது. ஆனால், ஹோட்டல் மேலாளர் அவர்களிடம் எந்தவித அடையாள அட்டைகளையும் வாங்காமல் அறையை ஒதுக்கியிருப்பதும் தெரியவந்தது.
இந்தநிலையில்தான், அடுத்தநாள் காலையில் அப்பெண் குளியலறையில் இறந்து கிடந்துள்ளார். பிறகு காவல்துறைக்கு ஹோட்டல் மேலாளர் தகவல் அளித்துள்ளார்.
குற்றவாளி கண்டறியப்பட்டது எப்படி?
இறந்த கிடந்தப்பெண், பிப்ரவரி 18 ஆம் தேதி புது தில்லியில் இருந்து பிரயாக்ராஜுக்கு தனது கணவருடன் பயணம் செய்திருப்பது காவல்துறையினர் கண்டறிந்தனர்.
இதனையடுத்து, இறந்த பெண்ணின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டநிலையில், பிப்ரவரி 21 ஆம் தேதி பெண்ணின் உறவினர்கள் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.
இந்தநிலையில்தான், இறந்தவர், டெல்லியில் திரிலோக்புரியில் வசிக்கும் அசோக் குமார் என்பவரின் மனைவி மீனாட்சி என்று தெரியவந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதன்பிறகு சந்தேகத்தில் பேரில் அசோக் குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் நடந்தது என்ன? என்பதை அறிந்துகொண்டனர்.
கொலை செய்யதது யார்? செய்யப்பட்டது எதற்காக?
அப்போதுதான், மனைவியை நான் தான் கொன்றேன் என்று குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் அசோக் குமார்.
கொலைக்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
துப்புரவுத் தொழிலாளியான அசோக் குமார், திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்துள்ளார். மனைவி மீனாட்சியை முடித்து விட்டால், எந்தவித பிரச்னையும் இல்லாமல், உறவை தொடரலாம் என்று நினைத்தால் பல முறை அவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளார்.
இதன் ஒரு முயற்சியாகதான், பிப்ரவரி 17 ஆம் தேதி, அசோக் குமார் கும்ப மேளாவிற்கு செல்வதாக அவரது மனைவி மீனாட்சியையும் அழைத்து கொண்டு சென்றுள்ளார். அங்குதான் ஹோட்டல் அறையில் வைத்து மனைவி மீனாட்சியை கூர்மையான ஆயுதத்தை வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
பிறகு, தனது இரத்த கறைப்படிந்த ஆடையையும், ஆயுத்ததையும் புத்திசாலித்தனமாக அப்புறப்படுத்தியுள்ளார். பிறகு தனது மகனிடத்தில், மீனாட்சி கூட்டத்தில் தொலைந்துவிட்டதாக நாடகம் ஆடியுள்ளார். முன்னதாக, சந்தேகம் வராமல் இருக்க, பிப்ரவரி 18 அன்று, அசோக் மனைவி மீனாட்சியுடன் புனித நீராடும் வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றினார்.
தந்தையின் விளக்கத்தில் சந்தேகமடைந்த மகன் அஸ்வின் குடும்பத்தினருடன் தாயை தேடியுள்ளார். பிறகுதான் போலீஸார் நடந்ததை கூற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.