மேலும் மேலும் பின்னடைவு.. கிளர்ச்சிக் குழுவில் இணைந்த மம்தாவின் நம்பிக்கை நட்சத்திரம்!
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜிக்கு எதிரான உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிருப்தி குழுவின் தலைவரான ரிதா ப்ரதா பானர்ஜி, அரூப் ராயைக் கட்சியின் புதிய தலைவராக அறிவித்து மம்தாவுக்கே ஆட்டம் காட்டி வருகிறார். அக்கட்சியைச் சேர்ந்த 20 எம்பிக்கள் திரிணாமுல் காங்கிரஸிருந்து விலகி, மூத்த தலைவர் ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் தேசியவாத இந்திய குடிமக்கள் (NCPI) கட்சியில் இணைந்தனர். அதோடு கட்சி நிர்வாகிகள் பலரும் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி வருகிறார்கள். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் பெரும் நெருக்கடிக்குள்ளாகி இருப்பதுடன் மம்தா பானர்ஜியும் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில், மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவராக இருந்த மூத்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதன் மித்ராவும் கிளர்ச்சி முகாமில் இணைந்தார். முன்னதாக, திரிணாமூல் காங்கிரஸில் உள்ள அனைத்துப் பதவிகளிலிருந்தும் அவர் ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மம்தா பானர்ஜியின் மிக நெருக்கமான மற்றும் ஆரம்பகால விசுவாசிகளில் ஒருவரான மதன் மித்ரா, சாரதா ஊழல் வழக்கு போன்ற கடினமான காலங்களிலும், சிறைவாசம் சென்றபோதும் அவர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) பக்கமே நின்றார்.

