"இது வெறும் தேர்தல் அல்ல; பாஜகவிற்கு எதிரான போராட்டம்" - மம்தா சூளுரை.!
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை வெறும் ஆட்சிப் போட்டி அல்ல, பாஜக மேற்கொள்ளும் அரசியல், கலாச்சார, தேர்தல் கட்டுப்பாட்டு முயற்சிக்கு எதிரான போராட்டமாக மம்தா பானர்ஜி சித்தரிக்கிறார். 294 இடங்களில் 291 இடங்களில் திரிணமூல் களமிறங்க, பாஜக-திரிணமூல் நேரடி மோதலாக சூழல் அமைகிறது. வங்காளம்-டெல்லி மோதலாகவும் அவர் இந்தத் தேர்தலை வர்ணிக்கிறார்.
தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. 294 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 291 இடங்களில் போட்டியிடவிருக்கிறது. தொடர்ச்சியாக 4-வது முறை வெற்றியைத் தக்க வைக்கும் நோக்கில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சின் தலைவருமான மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் சூறாவளிப் பரப்புரை செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற எஸ்.ஐ.ஆர்-ல் மேற்கு வங்கத்தில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு எதிராக ஆரம்பத்திலிருந்தது போலவே, நீர்த்துப் போகாமல் போராட்டங்களை மம்தா பானர்ஜி முன்னெடுத்து வருகிறார். காங்கிரஸ் 294 இடங்களிலும் தனித்து களமிறங்கும் சூழலில், பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் இடையே தான் போட்டி நிலவும் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில், மம்தா பானர்ஜி எதிர்த்து தனது பரபரப்புரைகளில் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
அதன்படி, இன்று பாஸ்சிம் மெதினிபூர் மாவட்டத்தில் உள்ள டெப்ரா தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி, இத்தேர்தல் அதிகாரத்திற்கான போட்டி மட்டுமல்ல; மாறாக, மாநிலத்தை அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், தேர்தல் ரீதியாகவும் கட்டுப்படுத்த பாஜக மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிரான போராட்டம் எனத் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், ”டெல்லியின் நிலப்பிரபுக்கள் என் கைகளிலிருந்து எல்லா அதிகாரங்களையும் பறித்துவிட்டனர். இத்தேர்தல் என்பது வங்காளத்திற்கும் டெல்லிக்கும் இடையிலான மோதல்” எனத் தெரிவித்தார். மேலும், பாஜகவை வங்காளத்திற்கு எதிரானது என சித்தரித்ததுடன், இந்தத் தேர்தலை அதிகாரத்திற்கான போட்டியாக மட்டும் பார்க்காமல், மாநிலத்தை அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், தேர்தல் ரீதியாகவும் கட்டுப்படுத்த பாஜக மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிரான போராட்டமாக பார்க்க வேண்டும் எனவும் பேசியிருக்கிறார்.
தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற பிறகு, டெல்லியைக் கைப்பற்றுவதற்காக நாடு முழுவதும் உள்ள அனைவரையும் ஒன்றிணைப்போம் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு, தேசிய அளவில் பாஜகவிற்கு எதிரான ஒருமுக்கிய குரலாக மம்தா தன்னை முன்னிறுத்தி வருகிறார்.

