மேற்குவங்கம் | மம்தா பானர்ஜி வீட்டில் சோகம்.. மருமகள் சடலமாக மீட்பு!!
முன்னாள் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரான நிஹார் முகர்ஜியின் மகள் பிரிஷ்டி முகர்ஜி, அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவருக்கு வயது 28.
பிரிஷ்டி முகர்ஜி ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில், அவர் முறைகேடாக நியமனம் பெற்றார் என நீதிமன்றம் அவரது ஆசிரியர் நியமனத்தை சமீபத்தில் ரத்து செய்தது. இதனால், அவர் தொடர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அவரது கணவருடன் விவகாரத்துக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச்சூழலில் தான், பிர்பூம் மாவட்டத்தின் ராம்பூர்ஹாட் பகுதியில் உள்ள அவரது இல்லத்தின் முதலாவது மாடியில் பிரிஷ்டி முகர்ஜி தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுகுறித்து அவரது உறவினர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த ராம்பூர்ஹாட் காவல் துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மரணத்திற்கான துல்லியமான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை, அவர் உயிரிழந்த சூழ்நிலைகள் குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

