"சூரிய அஸ்தமனத்திற்குள் நாம் வெற்றி பெறுவோம்" - மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் முகவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஓர் அவசரச் செய்தியை வெளியிட்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை மையங்களிலேயே தங்கியிருக்குமாறு திரிணாமுல் தொண்டர்களை வலியுறுத்தியுள்ள அக்கட்சியின் தலைவர், வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
"நான் நேற்று கூறியதுபோலவே, 2 அல்லது 3 சுற்றுகளுக்குப் பிறகு பாஜக முன்னிலையில் இருப்பதாக அவர்கள் காட்டுவார்கள்... சுமார் 100 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் தனது 'X' தளத்தில் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் பாஜக முன்னிலையில் இருப்பதாகத் தேர்தல் ஆணையத்தின் (ECI) போக்குகள் காட்டத் தொடங்கிய அதேவேளையில் வெளியிடப்பட்ட தனது காணொளிச் செய்தியில், ’வாக்கு எண்ணும் முகவர்களையும் கட்சி வேட்பாளர்களையும் வாக்குப்பதிவுப் பகுதியைவிட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது பாஜகவின் திட்டம். இதை நான் நேற்றிலிருந்தே சொல்லி வருகிறேன். அவர்கள் முதல் 2-3 சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தங்கள் முடிவுகளைக் காட்டுகிறார்கள், ஆனால் நமது முடிவுகளைக் காட்ட மாட்டார்கள். சில இடங்களில் 2-3 சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு 100 இடங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவிட்டனர்.
கல்யாணியில் 7 இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை பொருந்தவில்லை என்பது கண்டறியப்பட்டது. இது காவல்துறையைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது. அவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை சித்திரவதை செய்கிறார்கள், அலுவலகங்களை உடைக்கிறார்கள். சுமார் 100 தொகுதிகளில் நாம் முன்னிலையில் இருக்கிறோம், ஆனால் அந்தத் தகவல் மறைக்கப்படுகிறது. தேர்தல் ஆணையமும், மத்திய அரசும், காவல்துறையும் இதில் கூட்டுச் சதி செய்கின்றன. ஆனால், எனது கட்சித் தொண்டர்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சூரிய அஸ்தமனத்திற்குள் நாம் வெற்றி பெறுவோம். பயப்பட வேண்டாம்’ என்று பதிவிட்டுள்ளார்.

