மம்தா கட்சி நிதியில் போடப்பட்ட மாஸ்டர் பிளான்.. சீக்ரெட்டாய் கண்டுபிடித்த ED!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் உள்ள 440 கோடி ரூபாய் பணத்தை அமலாக்கத் துறை முடக்கியுள்ள நிலையில், அடுத்து ஒரு விசித்திரமான வழக்கைக் கண்டுபிடித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸில் மம்தா பானர்ஜிக்கு எதிரான உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிருப்தி குழுவின் தலைவரான ரிதா ப்ரதா பானர்ஜி, அரூப் ராயைக் கட்சியின் புதிய தலைவராக அறிவித்து மம்தாவுக்கே ஆட்டம் காட்டி வருகிறார். இதற்கிடையே, கொல்கத்தாவில் கடந்த ஒரு வாரத்தில் 5 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் முடிவில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின்கீழ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் உள்ள 440 கோடி ரூபாய் பணத்தை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இப்பணம் 3 தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.
தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை விசாரித்து வரும் அமலாக்கத்துறை, அடுத்து ஒரு விசித்திரமான வழக்கைக் கண்டுபிடித்துள்ளது. ஒரு சொகுசு ஜெட் விமானம் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை வாங்குவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் நிதியுதவி அளித்து, பின்னர் அதே விமானங்களை மீண்டும் வாடகைக்கு விட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றமசாட்டியுள்ளது.
கொல்கத்தாவைத் தளமாகக் கொண்ட கேர்வெல் ஏவியேஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற விமானப் போக்குவரத்து மேலாண்மை மற்றும் குத்தகை நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் இந்த விவரம் கண்டறியப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தனது அறிக்கையில், ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2026 வரையிலான காலகட்டத்தில் திரிணாமூல் கட்சியின் வங்கிக் கணக்குகளிலிருந்து கேர்வெல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சுமார் ரூ.160 கோடி மாற்றப்பட்டதாகக் கூறியுள்ளது. மேலும், அந்நிறுவனம் புதிதாக உருவாக்கப்பட்ட மற்றொரு நிறுவனத்திற்கு ரூ.82.96 கோடியை அனுப்பியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து மாற்றப்பட்ட இந்த நிதியை, கேர்வெல் நிறுவனம் எம்ப்ரேயர் 600 என்ற சொகுசு வர்த்தக ஜெட் விமானத்தையும், அகஸ்டா 109 எஸ்பி ஹெலிகாப்டர் ஒன்றையும் வாங்குவதற்குப் பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அந்த இரண்டு விமானங்களின் விலை சுமார் 112 கோடி ரூபாய் ஆகும். மேலும், கட்சியிடமிருந்து பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி கேர்வெல் அந்த விமானங்களை வாங்கியிருந்தபோதிலும், ஹெலிகாப்டர் மற்றும் எம்ப்ரேயர் ஜெட் விமானம் ஆகிய இரண்டும் திரிணாமூல் கட்சிக்கு வாடகைக்கு மீண்டும் குத்தகைக்கு விடப்பட்டிருந்ததும் அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிவதில் அமலாக்கத்துறை தற்போது தீவிர கவனம் செலுத்திவரும் நிலையில், இந்த நடவடிக்கையை அரசியல் உள்நோக்கம் கொண்டது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அமலாக்கத் துறை ஓர் அரசியல் கட்சியின் நிதியுதவியை மட்டும் விசாரிப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர், ஆம் ஆத்மி கட்சியின் கணக்குகளும் விசாரிக்கப்பட்டபோதும், அது டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கையெழுத்துப் போலி முதல் நில அபகரிப்பு வரை பல்வேறு வழக்குகளைச் சந்தித்து வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களுக்கு, இந்த விசாரணை மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

