மேற்கு வங்கம்| ”ராஜினாமா செய்ய மாட்டேன்.. 100 சீட்களை திருடிவிட்டது பாஜக” - மம்தா பானர்ஜி
மேற்கு வங்க தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில், மம்தா பானர்ஜி பபானிபூரில் தோல்வியடைந்தார். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சென்றபோது மத்தியப் படை வீரர்கள் ரவுடிகளைப் போல நடந்து கொண்டு தன்னை வயிற்றிலும் பின்பக்கத்திலும் உதைத்து வெளியேற்றியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இங்கு பெரும்பான்மைக்கு 148 இடங்கள் என்கிற நிலையில் பாஜக 207 இடங்களிலும், திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
2011-ம் ஆண்டிலிருந்து திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையாக இருந்து வந்த மேற்கு வங்கத்தை தற்போது பாஜக கைப்பற்றியுள்ளது.
மேற்கு வங்கத்தின் முதலமைச்சரான மம்தா பானர்ஜி தான் போட்டியிட்ட பபானிபூரில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 15,105 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
இந்நிலையில் பபானிபூரில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு நான் சென்றபோது, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே, மத்தியப் படை வீரர்கள் ரவுடிகளைப் போல நடந்துகொண்டனர், அவர்கள் எனது வயிறு மற்றும் பின்பக்கத்தில் எட்டி உதைத்தார்கள், வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து என்னை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.
100 இடங்களை பாஜக திருடியுள்ளது என்றும் திரிணாமுல் கட்சி தேர்தலில் தோற்கவில்லை என்றும், எனவே தான் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் 'மோசமான விளையாட்டுகளில்' ஈடுபடுவதாகவும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

