"2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் ஒவ்வொரு குடிமகனும் ஈடுபட்டுள்ளார்" - பிரதமர் மோடி
ஜம்மு கஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோனாமார்க் சுரங்கப்பாதையை துவக்கி வைத்தார். இதையடுத்து திறந்தவெளி ஜீப்பில் சுரங்க பாதையில் பயணம் மேற்கொண்டு சுரங்கப்பாதையை ஆய்வு செய்ததோடு சுரங்கத்தின் கட்டுமான பணிகள் மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வில், ஜம்மு கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா், ஜம்மு கஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பிரதமர் அலுவலக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அங்கு பேசிய பிரதமர் நரேந்திர மோடி...
ஜம்மு காஷ்மீரின் இந்தப் பருவத்தில் பனி, வெண்மையான பனிப் படலங்களால் மூடப்பட்ட அழகான மலைகள், இவற்றைப் பார்ப்பது இதயத்தை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு நமது முதலமைச்சர் இங்கிருந்து சில படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். அந்தப் படங்களைப் பார்த்த பிறகு, உங்களிடையே இங்கு வர வேண்டும் என்ற எனது ஆர்வம் மேலும் அதிகரித்தது.
இது பண்டிகைகளின் காலம்:
இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு பண்டிகை சூழ்நிலை நிலவுகிறது. பிரயாக்ராஜில் இன்று முதல் மகா கும்பமேளா தொடங்குகிறது. கோடிக்கணக்கான மக்கள் அங்கு புனித நீராடுவதற்காக திரண்டு வருகிறார்கள். பஞ்சாப் உட்பட முழு வட இந்தியாவும் லோஹ்ரியின் உற்சாகத்தால் நிறைந்துள்ளது. உத்தராயணம், மகர சங்கராந்தி, பொங்கல் போன்ற பல பண்டிகைகளின் காலம் இது. நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் இந்த புதிய இணைப்பு சுற்றுலாவிற்கு புதிய சிறகுகளை தரும்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு ரயில் மூலமாகவும் இணைக்கப்பட உள்ளது:
ஜம்மு காஷ்மீரில் வரும் நாட்களில் பல ரயில் மற்றும் சாலை இணைப்பு திட்டங்கள் நிறைவடைய உள்ளன. இப்பொழுது காஷ்மீர் பள்ளத்தாக்கு ரயில் மூலமாகவும் இணைக்கப்பட உள்ளது. இன்று இந்தியா முன்னேற்றத்தின் புதிய உச்சங்களை நோக்கி நகர்கிறது. 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஈடுபட்டுள்ளனர். இது நம் நாட்டின் எந்த ஒரு குடும்பமும் முன்னேற்றத்தில் பின்தங்கி இருந்தீராத சூழலில் தான் நிகழும்.
கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 4 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளது:
கடந்த 10 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட நாடு முழுவதும் 4 கோடிக்கும் அதிகமான ஏழை மக்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளது, மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். ஜம்மு காஷ்மீர் கடந்து 10 ஆண்டுகளில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சிறந்த கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் இப்பொழுது சுரக்கப்பாதைகள் உயரமான பாலங்கள் மற்றும் கயிர் பாலங்களின் மையமாக மாறி வருகிறது. இங்கு உயரமான சுரங்கப் பாதைகள் கட்டப்பட்டு வருகிறது, உலகின் மிக உயரமான ரயில் பாதையும் இங்கு கட்டப்பட்டு வருகிறது” என்று பேசினார்.