\
Cockroach Janata Party's 70-Day Rise Turns National Heads
கரப்பான் பூச்சி ஜனதா கட்சிPt web

நாட்டையே அதிரவைத்த 'கரப்பான் ஜனதா கட்சி'.. 70 நாட்களில் சாதித்த இளைஞர் பட்டாளம்!!

கரப்பான் ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. வெறும் 70 நாட்களில் இந்தியாவை மிகப்பெரிய ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய இளைஞர்களை இவ்வளவு சீக்கிரம் ஓரணியில் இணைத்த இக்கட்சி கடந்துவந்த பாதையைக் பார்க்கலாம்.
Published on

மே மாத மத்தியில் வழக்கு விசாரணை ஒன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சிகள் எனக்கூறி விமர்சித்ததாக செய்திகள் வெளியாகின. இதனால் கோபமடைந்த அபிஜீத் திப்கே என்ற இளைஞர் மறுநாளே அதாவது மே 16ஆம் தேதி இன்ஸ்டா சமூகத்தளத்தில் கரப்பான் ஜனதா கட்சி என்ற பெயரில் நையாண்டியாக ஒரு இயக்கத்தை தொடங்கினார். இது காட்டுத்தீபோல் இளைஞர்களிடம் பரவி 3 கோடி பேருக்கு மேல் உறுப்பினராக சேரவைத்தது.

அபிஜீத் திப்கே
அபிஜீத் திப்கேReuters

அமெரிக்காவில் வசித்துவந்த அபிஜீத் திப்கே ஜூன் 6ஆம் தேதி இந்தியா திரும்பி போராட்டங்களை தொடங்கினார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட 5 முக்கிய தலைப்புகளில் பல்வேறு கோரிக்கைகளுடன் இணையதளம் ஒன்றும் கரப்பான் ஜனதா கட்சிக்காக உருவானது. ஜூன் 20ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரம்பற்ற போராட்டம் தொடங்கியது. ஜூன் 28இல் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கும் இணைந்து உண்ணாவிரதம் தொடங்கிய நிலையில் போராட்டம் வேகம் பிடித்தது. நாடெங்குமிருந்து இளைஞர்கள் வரத்தொடங்கினர். ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி கரப்பான் ஜனதா கட்சியினர் பேரணி சென்றபோதுதான் பெரும் திருப்பம் ஏற்பட்டது.

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் நாடு முழுக்க பேசுபொருளாகி ஜந்தர் மந்தரில் மொழி, மதம், இனம், கட்சி வேறுபாடு கடந்து மாணவ மாணவியர் குவிந்தனர். இப்போராட்டம் பின்னர் மும்பை, சென்னை, கொல்கத்தா, பாட்னா என பிற நகரங்களுக்கும் பரவத்தொடங்கியது. மாணவர்களை சமாதானப்படுத்த பிரதமரே நள்ளிரவில் இன்ஸ்டாகிராமில் தோன்றும் நிலை ஏற்பட்டது. அரசியல் கட்சிகளும் மாணவர்களுக்கு ஆதரவாக அணிவகுத்தன. நாடெங்கும் போராட்டத்தீ கொளுந்துவிட்டு எரியும் என்ற நிலை ஏற்பட்ட சூழலில் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். சுமார் 80 ஆண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில் இந்த போராட்டம் இடம்பெற்றுவிட்டது என்றே கூறலாம்.

Cockroach Janata Party's 70-Day Rise Turns National Heads
பி எம் ஸ்ரீ திட்டம் முதல் நீட் முறைகேடு வரை.. தர்மேந்திர பிரதான் பதவி காலத்தில் எழுந்த பிரச்னைகள்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com