மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டு சிறை வெளியான அதிர்ச்சி பின்னணி!
மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி ஆசிஷ் லதா ராம்கோபின் 56 வயதான இவர் அகிம்சைக்கான சர்வதேச மையம் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார்.
இவர், தென்ஆப்பிரிக்காவில் உள்ள ‘நியூ ஆப்ரிக்கா அலையன்ஸ்’ நிறுவனத்தின் இயக்குனர் மகாராஜ் என்பவரை அண்மையில் சந்தித்துள்ளார். இவரது நிறுவனம் ஆடைகள், காலணிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்து வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்களுக்கும் கடன்களும் அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மகாராஜை சந்தித்த காந்தியின் கொள்ளு பேத்தி ஆசிஷ் லதா, தனக்கு 6 மில்லியன் ரேண்ட் வேண்டும் என கேட்டுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ரூ.3.22 கோடி ருபாய் பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல நெட்கேர் குழும மருத்துவமனைக்கு துணிகள் விநியோகம் செய்ய இந்தியாவில் இருந்து 3 கன்டெய்னர்கள் இறக்குமதி செய்துள்ளதாகவும், அதற்கு வரி செலுத்த பணம் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை நிரூபிக்க ஏற்கனவே செய்து வைத்திருந்த போலி ஆவணங்களையும், காட்டியுள்ளார். இதனை வாங்கி பார்த்த மகாராஜ் ஆரம்பத்தில் சந்தேகபட்டுள்ளார்..பின்னர், ஆசிஷ் லதா மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி என்பதால், அவரை நம்பி மகாராஜ் 6 மில்லியன் ரேண்ட் பணம் வழங்கியுள்ளார்.
பல நாட்கள் கடந்தும் வாங்கிய பணத்தை ஆசிஷ் லதா திருப்பிக் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. அவர் கொடுத்த ஆவணங்களும் போலி என தெரியவந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மகாராஜ், ஆசிஷ் லதா மீது பண மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கை விசாரித்த டர்பன் நீதிமன்றம் பண மோசடி செய்யப்பட்டது உறுதியானதால் ஆசிஷ் லதாவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. ஆனால், ஆசிஷ் லதா தற்போது 50,000 ரேண்ட் பிணைத் தொகை செலுத்தி ஜாமீனில் வெளி வந்துள்ளார். மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தான் பலரையும் அதிர வைத்துள்ளது.