பக்ரீத் பண்டிகை | ஆடுகள் விற்பனை சந்தையை மூட மகாராஷ்டிரா உத்தரவு!
இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை, வரும் ஜூன் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் ஆடுகள் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி மகாராஷ்டிராவில் கால்நடை சந்தைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா கோசேவா ஆயோக் (Maharashtra Goseva Ayog) மாநிலத்தில் உள்ள வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களுக்கு (APMCs) ஜூன் 3 முதல் 8 வரை கால்நடை சந்தைகளை மூட உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
”இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை இருக்கிறது. மேலும், பசுவதை இருப்பின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், சந்தைகளையே நடத்தக் கூடாது என்றால் ஆடுகளை எப்படி விற்பது? சந்தைகள் செயல்படவில்லை என்றால், தொழிலாளர்களின் வருமானம் பாதிக்கப்படும். மகாராஷ்டிரா கோசேவா ஆயோக் பரிந்துரைக்க மட்டுமே அதிகாரம் கொண்டுள்ளது. ஆனால், சந்தை குழுக்களுக்கு நேரடியாக உத்தரவுகளை பிறப்பிப்பது அதன் அதிகாரத்தை மீறுவதாகும்" என வஞ்சித் பகுஜன் அகாடியின் மாநில துணைத் தலைவர் ஃபரூக் அகமது கேள்வி எழுப்பியுள்ளார்.