மராத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: மஹாராஷ்டிரா அரசின் புதிய திட்டம்!
மகாராஷ்டிர அரசு விரைவில் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக ஆட்டோ, டாக்சி மற்றும் இ-பைக் சேவையை தொடங்க உள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் மராத்தி பேசும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படவிருக்கிறது. மாநில போக்குவரத்து துறை கீழ் செயல்படும் இந்த திட்டத்திற்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த செயலி மஹாராஷ்டிரா போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மித்ரா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்படுகிறது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், பயணிகளுக்கும், வேலை தேடும் இளைஞர்களுக்கும் பயனளிக்கும் ஒரு சமூக மாற்றமாக இருக்கும் என அம்மாநில அமைச்சர் பிரதாப் சர்னாயக் கூறியுள்ளார். பெரும்பாலான இளைஞர்கள் படித்து விட்டு, தனியார் நிறுவனங்களில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்து வரும் நிலையில், அரசே இது போன்றதொரு திட்டத்தை முன்னெடுத்துள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் இதே போன்றதொரு திட்டத்தை தமிழக அரசு கையில் எடுக்குமா என்பதே, இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.