”தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது” - மகாராஷ்டிரா ஆளுநர் பேச்சு!
பிரிட்டிஷ்-இந்திய எழுத்தாளர் சச்சின் நந்தா எழுதிய ஹெட்கேவர்: எ டெஃபினிட்டிவ் பயோகிராபி என்ற புத்தக வெளியீட்டு விழா மும்பை ஆளுநர் மாளிகை நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "பேரரசர் அசோகர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்திய துணை கண்டத்தை ஒன்றிணைத்தார். கலாசாரரீதியாகவும் பாரம்பரியமாகவும், இந்தியா எப்போதும் ஒரே நாடாகத்தான் இருந்தது. அந்நிய படையெடுப்பாளர்களால் இந்தியாவை பிரித்து அதை ஆள முடிந்தது. சில மாநிலங்களில் இன்றும் பிரிவினைவாத சக்திகள் தீவிரமாக செயல்படுகின்றன. ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவர் முன்வைத்த ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய சிந்தனைகள் முன் எப்போதையும்விட தற்போது மிகவும் பொருத்தமானவையாகும். ஆர்எஸ்எஸ் தனது நீண்ட பயணத்தில் நூற்றுக்கணக்கான தேசபக்தர்களை உருவாக்கியது. அவர்கள் தன்னலமின்றி வாழ்ந்து தேசத்திற்காக இறந்தனர். சமண மதம் தோன்றியபோது, மூன்றில் இரண்டு பங்கு தமிழர்கள் அதைப் பின்பற்றினர். இன்று 40,000 தமிழ் சமணர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
சமண மதம் பரவியபோது, அது தானாகவே பரவியது. பௌத்தமும் தமிழ்நாட்டில் பரவலாக பின்பற்றப்பட்டது. தமிழ்நாடு ஆங்கிலேயர்களால் அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டது. எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை. வரலாற்று ரீதியாக, தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய, கொங்குநாடு எனப் பிரிக்கப்பட்டது. அவை தனித்தனி ராஜ்ஜியங்களாக இருந்தன. நாம் அதை மேலும் பிரித்துக்கொண்டே போனால், அது ஒரு டவுன் பேருந்தில் ஏறுவது போல, அங்கு நீங்கள் சென்றிடவும், திரும்பி வருவதற்கும் உங்கள் பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும். அதுதான் அடிப்படை யதார்த்தம். அத்தகைய பிரிவு இந்தியாவின் சர்வதேச அளவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் திறனை பலவீனப்படுத்தும். மகாராஷ்டிராவில்கூட, விதர்பா வேறு, கொங்கன் வேறு, மராத்வாடா வேறு. இப்படியே பிரிந்துகொண்டே இருந்தால், கோரிக்கைகளை முன்வைக்க யாருக்கு பேரம் பேசும் சக்தி இருக்கும்? இந்தியாவாக நாம் ஒற்றுமையாக இருப்பதால்தான் சர்வதேச அரங்கில் நமது நலன்களை நிலைநாட்ட முடியும். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளைப்போல நாம் ஒரு சிறிய நாடாக இருந்திருந்தால், அதே பேரம் பேசும் சக்தி நமக்கு இருக்காது” என அவர் உரையாற்றியதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த உரை வைரலான நிலையில், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இதற்குப் பதிலளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ”இது போலிச் செய்தி என்றும், திரித்துக் கூறப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.