”ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா தோல்வி..” சர்ச்சை கருத்தைக் கூறிய Ex CM.. மன்னிப்பு கேட்க மறுப்பு!
”ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியா முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டது” என மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிருத்விராஜ் சவான் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கருத்துக்கு மன்னிப்பு கேட்கவும் அவர் மறுத்துவிட்டார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுக் கொண்டது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவமும், விமானப் படையும் இணைந்து, மே 8ஆம் தேதி அதிகாலை பயங்கரவாதிகளின் 9 முகாம்களின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 100 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் தாக்கியது. பின்னர் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த தாக்குதல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ”ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் முதல் நாளிலேயே இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்தியா முற்றிலுமாக தோற்கடிக்கப்பட்டது” என மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிருத்விராஜ் சவான் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், அவர் தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
இதுகுறித்து அவர், ”நான் எந்தத் தவறும் சொல்லவில்லை, மன்னிப்பு கேட்க வேண்டிய கேள்விக்கே இடமில்லை. நமது அரசியலமைப்பு எனக்கு கேள்வி கேட்கும் உரிமையை வழங்கியுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார். மேலும், 12 லட்சம் வீரர்களைக் கொண்ட இந்திய இராணுவத்தை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தானும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் அடிக்கடி கூறிவருவதற்கு மத்தியில் பிருத்விராஜ் சவான் கூறியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

