மகாராஷ்டிரா | மக்களைக் கொடுமைப்படுத்திய போலி சாமியார்!
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டம், வைஜாப்பூர் தாலுகாவின் ஷியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் பகரே. இவர், ’பாபா’ என்ற பெயரில் அங்கிருந்த கோயிலில் இருந்தபடி, ஆன்மிகச் சிகிச்சைகள் செய்வதாகக் கூறி மக்களைச் சித்திரவதை செய்துள்ளார். அதாவது, தனக்கு தெய்வ சக்தி இருப்பதாகக் கூறி, அந்தக் கிராம மக்களிடம் இவர், திருமணமாகாதவர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பெற உதவுவேன், நோய்களைக் குணப்படுத்துவேன் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி அவரிடம் சென்ற மக்களை, அவர் சடங்குகள் என்ற பெயரில் சித்திரவதை செய்துள்ளார்.
காலணிகளை அவர்களின் வாய்களில் திணிப்பது, மரத்தின் இலைகளை உண்ணவைத்தது, கோயிலைச் சுற்றி வட்டமாக உட்கார வைத்து குச்சிகளால் அடிப்பது, காலால் தொண்டையில் மிதிப்பது போன்ற கொடுமைகளை செய்துள்ளார். மேலும், சடங்கின் ஒரு பகுதி எனக்கூறி சிலரை தனது சிறுநீரை குடிக்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதையறிந்த மூடநம்பிக்கை எதிர்ப்பு அமைப்பைச் சேர்ந்த ஆர்வலர்கள் மறைக்கப்பட்ட கேமராக்களைப் பயன்படுத்தி ஒரு ஸ்டிங் ஆபரேஷனை மேற்கொண்ட பிறகு இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆர்வலர்களின் புகாரைத் தொடர்ந்து, இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார். போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.