மகாராஷ்டிரா | தனிப் பெரும்பான்மைக்கு காய் நகர்த்தும் பாஜக., ஷிண்டேவின் திட்டமும் எதிர்காலமும் என்ன?
மகராஷ்டிரத்தில் 2024 தேர்தலில் வென்று பாஜக-சிவசேனா,-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. ஆட்சி அமைந்த காலத்திலிருந்தே பாஜகவுக்கும் சிவசேனாவிற்கும் பிணக்கு நிலவிவருகிறது. இந்நிலையில் தான், மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அமித் ஷா-வை சந்தித்து பேசியிருக்கிறார்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சமீபத்தில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, உள்ளாட்சித் தேர்தலுக்கு முந்தைய நாள் பா.ஜ.வின் மாநிலத் தலைவர் ரவீந்திர சவான், சிவசேனா தலைவர்களைத் தனது கட்சிக்கு இழுக்க முயற்சிப்பதாக ஷிண்டே புகார் அளித்துள்ளார். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜக, தன்னையும் தனது கட்சியையும் நடத்தும் விதம் குறித்து முறையிட்டுள்ளார்.
ஆனால், ஷிண்டேவுக்கு அமித் ஷாவிடமிருந்து எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். மாறாக, ஒவ்வொரு கட்சிக்கும் தனது தளத்தை விரிவுபடுத்திக்கொள்ள உரிமை உள்ளது என்றும் நாட்டின் மிகப்பெரிய கட்சியான பா.ஜ.கவில் இணைய விரும்புகிறவர்களைத் தடுக்க முடியாது என்றும் ஷா தரப்பில் ஷிண்டேவுக்குத் தெளிவாக உணர்த்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. “தன்னுடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் விலகிச் செல்வது குறித்து, பிற கட்சிகளை குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, ஷிண்டே தன் ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்று பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள்.
2029 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் துணையின்றி பா.ஜ.க. தனித்து ஆட்சி அமைப்பதே தங்களின் நீண்ட காலத் திட்டம் என்று பா.ஜ.க.வின் உயர்மட்டத் தலைமை ஷிண்டேவிடம் வெளிப்படையாகவே கூறிவிட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த பேச்சுகளை ஷிண்டே மறுத்துள்ளார். பிகார் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காகவே அமித் ஷாவை டெல்லியில் சென்று சந்தித்ததாக, ஷிண்டே கூறியுள்ளார்.
எப்படி இருந்தாலும் மகாராஷ்டிராவில் கட்சியை மென்மேலும் வலுப்படுத்தி 2029 சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பதற்கான பணிகளை பாஜக நாளுக்கு நாள் தீவிரப்படுத்திவருகிறது என்பதை மறுக்க முடியாது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதை ஷிண்டே எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்? இதனால் மகாராஷ்டிர அரசியலில் விளையப் போகும் மாற்றங்கள் என்ன என்பவை போகப் போகத் தெரியும்.

