ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார் ஏக்நாத் ஷிண்டே... மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் யார்?
மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதனையொட்டி, அம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என கேள்வி எழுந்தது.
இந்தநிலையில், அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவின் தேவந்திர பட்னாவிஸை முதல்வராக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியானது. ஏக்நாத் சிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி ஏற்பார்கள் என, மகாயுதி கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும், தலா 10 முதல் 12 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளையில், உள்துறை மற்றும் நிதித்துறையை பாஜகவே வைத்துக்கொள்ளும் எனவும், மகாயுதி வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநில பொறுப்பு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே. இச்சந்திப்பில், மகாராஷ்டிர பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித்பவார் போன்றோரும் உடனிருந்தனர்.
இதனிடையே தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலமைச்சராக பொறுப்பேற்று, ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் போன்றோர் துணை முதலமைச்சர்களாக பொறுப்பேற்பார்கள் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பதற்கான பணிகள் தொடங்க உள்ளன. எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதும் இன்றைக்குள் முடிவு செய்யப்பட்டு இன்று இரவுக்குள் அமைச்சரவை எப்போது பதவியேற்கும் என்ற தகவல் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.