உத்தரப்பிரதேசம் | கும்பமேளாவில் மீண்டும் வாகன நெரிசல்!
உலகின் மிகப்பெரிய பொதுமக்கள் கூடும் நிகழ்வான, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கியது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு, உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் படையெடுத்தவண்ணம் உள்ளனர். நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கும்பமேளாவுக்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். 45 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் விழா முடிய சில நாட்களே இருக்கும் நிலையில், பக்தர்கள் எண்ணிக்கை தற்போது 60 கோடிக்கும் மேல் தாண்டியுள்ளது. இன்னும் 3 நாட்கள் (பிப்.26) நடைபெறும் இந்த நிகழ்வில் தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களால் பிரயாக்ராஜ் நகர் மீண்டும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது. கும்பமேளா இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதால், புனிதநீராட பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்து வருகின்றனர். இதனால், பிரயாக்ராஜ் நகரில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல நீண்ட கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், பக்தர்கள் கடும் சிரமமடைந்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் பலர், மகா கும்பமேளாவை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் வாகனங்களில் இருந்து இறங்கி 10-15 கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று நீராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம் கும்பமேளாவை விமர்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களை பிரமதமர் மோடி விமர்சித்துள்ளார். அவர், “இந்து நம்பிக்கையை வெறுக்கும் மக்கள், பல நூற்றாண்டுகளாக ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். அடிமைத்தன மனநிலையில் விழுந்த மக்கள் நமது நம்பிக்கை மற்றும் கோயில்கள், கலாசாரம் மற்றும் கொள்கைகளைத் தொடர்ந்து தாக்குகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.