ம.பி: இளைஞரை அரை நிர்வாணமாக்கி ஷூவை வாயால் எடுக்கச் சொன்ன அவலம்! வைரலான 2021 சம்பவ வீடியோவும் கைதும்

மத்தியப் பிரதேசத்தில் ஆண் ஒருவரை அரை நிர்வாணமாக்கில் ஷூவை காலால் எடுக்கச் சொல்லி கொடுமைப்படுத்தும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச வீடியோ
மத்தியப் பிரதேச வீடியோtwitter

மணிப்பூரில் குக்கி இன பெண்கள் இருவர் நிர்வாணமாக, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவத்தின் வீடியோ வெளியாகி அனைத்து இதயங்களையும் காயப்படுத்திய நிலையில், இன்னும் சில இடங்களில் பெண்கள் பாதிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. இதில் சில போலிச் செய்திகளும் இடம்பெற்று வருகின்றன. தவிர, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற வீடியோக்களையும் எடுத்து சில விஷமிகள் பரப்பி வருகின்றனர்.

அந்த வகையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் ஆணும் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளார். 2021இல் எடுக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, குற்றம் இழைத்தவர்களைக் கைது செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள ஹனும்னா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிப்ராஹி கிராமத்தில்தான் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோவில், 34 வயது மதிக்கத்தக்க நபரின் கைகள் கட்டப்பட்டுள்ளது. பின்னர், அவரை அரை நிர்வாணமாக்கி தடியால் ஒருவர் கடுமையாகத் தாக்குகிறார். பின்பு, கீழே இருக்கும் ஒரு ஷூவை அவருடைய வாயால் எடுக்கச் சொல்லி கேட்கிறார். அதை அவர் எடுக்காததால் கடுமையாகத் தாக்கப்படுகிறார். தாக்கிய நபர் அந்த கிராமத்தில் பஞ்சாயத்து தலைவியின் கணவர் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Pravesh Shukla
Pravesh Shukla

தற்போது அந்த வீடியோவின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் குற்றம் இழைத்தவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். சொத்து தகராறு காரணமாகத்தான் இந்தச் செயல் நடைபெற்று இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ”இந்தச் செயலில் ஈடுபட்ட முக்கிய நபரையும் அவருடைய கூட்டாளிகள் இருவரையும் கைது செய்துள்ளோம். இந்த வீடியோ, ரேவாவில் உள்ள ஹனும்னா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிப்ராஹி கிராமத்தில் கடந்த 2021 மே மாதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றமிழைத்தவர் மூவரும் நீதிமன்றக் காவலில் உள்ளனர்” என காவல் துறை தெரிவித்துள்ளது.

சமீபத்தில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள சித்தி மாவட்டத்தில் பழங்குடியின இளைஞர் மீது ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் வைரலான வீடியோவை அடுத்து இந்த வீடியோவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com