ம.பி. | புற்றுநோய் குணப்படுத்தும் 'பசு பொருட்கள்' ஆராய்ச்சி: ரூ.3.5 கோடி நிதியில் முறைகேடு?
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள நானாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓர் ஆராய்ச்சித் திட்டம் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள நானாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓர் ஆராய்ச்சித் திட்டம் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. பசுவின் சாணம், கோமியம் மற்றும் பால் பொருட்களை உள்ளடக்கிய 'பஞ்சகவ்யா' முறையைக் கொண்டு புற்றுநோய் உள்ளிட்ட தீவிர நோய்களைக் குணப்படுத்த முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சிக்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு மாநில அரசு 3.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தது. சுமார் 10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்தத் திட்டத்தில், நிதி நிர்வாகம் மற்றும் அறிவியல் பூர்வமான முடிவுகளில் பெரும் குளறுபடிகள் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2011 முதல் 2018 வரையிலான காலத்தில், பசுவின் சாணம், கோமியம், சேமிப்புப் பாத்திரங்கள் மற்றும் இயந்திரங்கள் வாங்க ₹1.92 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால், சந்தை விலையின்படி, இவை அனைத்திற்கும் ரூ15 முதல் ரூ.20 லட்சம் மட்டுமே செலவாகியிருக்க வேண்டும் என ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.
திட்ட மதிப்பீட்டில் இல்லாத வாகனங்களை ரூ.7.5 லட்சத்திற்கு வாங்கியது, வாகன எரிபொருள் மற்றும் பராமரிப்பிற்காக மேலும் ரூ.7.5 லட்சம் செலவிட்டது, மற்றும் ரூ.15 லட்சம் மதிப்பிலான பர்னிச்சர்கள் வாங்கியது ஆகியவை தேவையற்ற செலவுகளாகக் கருதப்படுகின்றன. ஆராய்ச்சி தொடர்பான பணிகளுக்காகப் பல்கலைக்கழக அதிகாரிகள் 23 முதல் 24 முறை பல்வேறு நகரங்களுக்கு விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தத் திட்டத்திற்கு அந்தப் பயணங்கள் அவசியமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கூடுதலாக, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு பஞ்சகவ்யா சூத்திரத்தைப் பயன்படுத்தி இதுவரை எந்த சிகிச்சையும் உருவாக்கப்படவில்லை.
மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், கூடுதல் ஆட்சியர் தலைமையிலான குழு இந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளைப் பல்கலைக்கழக பதிவாளர் மறுத்துள்ளார். அனைத்துப் பொருட்களும் டெண்டர் முறையிலேயே வாங்கப்பட்டதாகவும், அரசின் விதிமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் எஸ்.எஸ். தோமர், "பஞ்சகவ்யா திட்டம் 2012 முதல் இயங்கி வருகிறது.
இயந்திரங்கள் அல்லது வாகனங்கள் என அனைத்து கொள்முதல்களும் திறந்த டெண்டர்கள் மூலம் செய்யப்பட்டன. அரசாங்க விதிகள் பின்பற்றப்பட்டுள்ளன. எந்த மோசடியும் இல்லை. தணிக்கை நடத்தப்பட்டது, அனைத்து சான்றிதழ்களும் அனுப்பப்பட்டன. ஒரு விசாரணைக் குழு வந்தது, நாங்கள் அனைத்து ஆவணங்களையும் வழங்கினோம்; எந்த உண்மைகளும் மறைக்கப்படவில்லை... இந்த திட்டம் ₹ 3.5 கோடி மதிப்புடையது... நாங்கள் இன்னும் இளைஞர்களுக்கும் விவசாயிகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

