ம.பி. | 300 பேர் பாதிப்பு.. பார்வையைப் பறித்த Carbide Guns.. புதிய தீபாவளி பட்டாசால் நேர்ந்த சோகம்!
மத்தியப் பிரதேசத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது 300 பேருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கார்பைடு கன் என்ற வெடி கருவிக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 20ஆம் தேதி கோலாகலமாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. முன்னதாக, இந்தப் பண்டிக்கைக்காகப் பல்வேறு ரகங்களில் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டன. அதில் ஒன்றாக, மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் பட்டாசு வெடிப்பதற்காக ’கார்பைடு கன்’ என்ற கருவி விற்பனை செய்யப்பட்டது. இது, 150 - 200 ரூபாய் வரை விற்கப்பட்டதால், ஏராளமானோர் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். ஆனால், ஆன்லைன் வணிகத் தளங்களில் இது, ரூ.500 முதல் ரூ.2,000 வரை விற்பனை செய்யப்பட்டன. இந்தச் சாதனத்தில், 'காஸ் லைட்டர், கால்சியம் கார்பைடு' ஆகியவை பயன்படுத்தப்பட்டது.
'கால்சியம் கார்பைடு' உடன் தண்ணீர் சேரும்போது, அது 'அசிட்டிலீன்' வாயுவை வெளியேற்றுகிறது. இது, ஒரு தீப்பொறியுடன் இணையும்போது, பயங்கர சத்தத்துடன் வெடிக்கும். துப்பாக்கியில் இருந்து வெளியேறும் நெருப்புத் துகள்களால் பார்வைத்திறன் பாதிக்கப்படும்.
இந்த நிலையில், இக்கருவி மூலம் பட்டாசு வெடித்த 300 பேருக்கு கண்களில் காயம் ஏற்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகளும் அடக்கம். மேலும், காயமடைந்தவர்களில் சுமார் 30 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், நிரந்தரமாக பார்வையை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா தெரிவித்துள்ளார். பாதுகாப்பில்லாத இதுபோன்ற வெடி கருவியை விற்பனை செய்தவர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் போபால், குவாலியர், விதிஷா உள்ளிட்ட இடங்களில் உள்ள பட்டாசு கடைகளில் சோதனை நடத்தும் காவல் துறையினர், வெடி கருவிகளை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த கார்பைடு ரக துப்பாக்கி விற்பனைக்கு வருவதை அறிந்த மத்தியப் பிரதேச அரசு, மாநிலம் முழுதும் கடந்த, 18ஆம் தேதியே தடை விதித்திருந்தது. இருந்தும், பலர் அதை சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

