மாரடைப்பு: ஓடிப்போய் உதவிய இளைஞர்கள்.. ஜாமீன் மறுத்த நீதிபதி.. கடிதம் எழுதிய முன்னாள் முதல்வர்!

ம.பி. முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சிவ்ராஜ் சிங் சவுகான்
சிவ்ராஜ் சிங் சவுகான்புதிய தலைமுறை

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த மாதம் (நவம்பர்) சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் பாஜகவும், தெலங்கானாவில் முதல்முறையாக காங்கிரஸும், மிசோரமில் ஜோரம் மக்கள் இயக்கமும் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளன. மத்தியப் பிரதேச மாநில புதிய முதல்வராக மோகன் யாதவ் ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டு பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான், அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவிக்கு மன்னிப்பு வழங்கக்கோரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர், ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்களுக்காக இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

இதையும் படிக்க: Ind W- Eng W Test: மகத்தான 3 சாதனைகளைப் படைத்து மகுடம் சூடிய இந்திய மகளிர் அணி!

டெல்லியில் இருந்து ஜான்சிக்கு பயணம் செய்வதற்காக, கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி துணைவேந்தர் ரஞ்சித் சிங் ரயிலில் பயணித்துள்ளார். அப்போது ரயில் பெட்டியில் அமர்ந்திருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்ட ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களான ஹிமான்சு ஸ்ரோட்ரியா மற்றும் சுக்ரித் சர்மா ஆகிய இருவரும் அவருக்கு உதவி புரிந்துள்ளனர். அதாவது, குவாலியரில் ரயில் நின்றதும், அவரைத் தூக்கிக் கொண்டு ஓடிய அந்த இளைஞர்கள், அனுமதியின்றி வெளியே நிறுத்தப்பட்டிருந்த நீதிபதியின் காரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவர்கள் நீதிபதியின் கார் சாவியை டிரைவரிடம் இருந்து பறித்து, காரை ஓட்டிச் சென்றுள்ளனர். வாகனத்தை இளைஞர்கள் வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாக, ஓட்டுநர் பாவ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், அவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் குவாலியர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இதற்கிடையே, சிறையில் உள்ள மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்தது. அவர்கள் குவாலியரில் உள்ள ஜெயரோக்யா மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதையும் படிக்க: ”வாழ விருப்பமில்லை.. தற்கொலைக்கு அனுமதியுங்கள்..” நீதிபதியால் பாலியலுக்கு ஆளான பெண் நீதிபதி கடிதம்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு மாணவர்களின் பெற்றோர்களும் கைகளை கூப்பி நீதிபதியிடம், ”இந்த இரண்டு குழந்தைகளும் உங்கள் குழந்தைகள் போன்றவர்கள். அவர்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்து விடுங்கள்” என்று கூறியுள்ளனர்.

மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார். ’’உதவி செய்வதாக இருந்தாலும்கூட, ஒருவரிடம் பணிவாகத்தான் காரை கேட்க வேண்டுமே தவிர, வலுக்கட்டாயமாக சாவியை பிடுங்கிச் செல்லக்கூடாது. வலுக்கட்டாயமாக கார் சாவியைப் பிடுங்கி இருப்பது குற்றம்” எனக் கூறி ஜாமீன் வழங்க சிறப்பு நீதிபதி மறுத்துவிட்டார்.

சிவராஜ் சிங் சவுகான்
சிவராஜ் சிங் சவுகான்

இந்நிலையில்தான் முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் மத்தியப் பிரதேச மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ”ஓர் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் காரை எடுத்துச் சென்றுள்ளனர். மனிதாபிமான அடிப்படையிலும், அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் இருவரையும் விடுவிக்க வேண்டும். அதோடு அவர்கள் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதல்வர் டாக்டர் மோகன் யாதவும், ”இந்த விவகாரத்தில் காவல்துறை அவசரப்படக் கூடாது, கடுமையான பிரிவுகளை உடனடியாகத் திணிப்பதைத் தவிர்க்க வேண்டும்; மாணவர்களின் நோக்கம் தூய்மையானது என்பதால் அவர்களுக்கு முழு உதவி செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: அயோத்தியில் கட்டப்பட உள்ள பிரமாண்ட மசூதி.. அடிக்கல் நாட்டு விழாவிற்கு மெக்கா இமாம் வருகை?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com