Soft Hindutva-வை கையிலெடுக்கும் காங்? வேலையற்ற நிலையில் 39 லட்சம் மக்கள்...ம.பி. தேர்தல் களம்

மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு..
மத்தியப் பிரதேசம் தேர்தல்
மத்தியப் பிரதேசம் தேர்தல்pt web

ஐந்து மாநில தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நவம்பர் 7-ஆம் தேதி மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் ஒரே கட்டமாகத் தேர்தலும், சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக 20 தொகுதிகளிலும் தேர்தல் நடந்தது.

அடுத்தபடியாக நவம்பர் 17-ஆம் தேதி மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஒரே கட்டமாகவும், சத்தீஷ்கர் மாநிலத்தில் எஞ்சியுள்ள 70 தொகுதிகளில் இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது.

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமாக 5.66 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 2.88 கோடி ஆண் வாக்காளர்களும், 2.72 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். இதில் 22.36 வாக்காளர்கள் முதன்முறையாக தங்களது வாக்குகளை செலுத்த உள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தை பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி (எஸ்.பி), பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் காங்கிரஸ், பாஜக என இருமுனை போட்டியாகவே மத்தியப் பிரதேச தேர்தல் பார்க்கப்படுகிறது.

கடந்த தேர்தல்கள்

கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகளில் வென்றிருந்தது. பாஜக 109 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தது. ஆனால் வாக்கு சதவீதம் என்று பார்த்தால் காங்கிரஸ் கட்சியை விட பாஜக அதிகம் பெற்றிருந்தது. 40.89% வாக்குகளை காங்கிரஸ் வாங்கியிருந்தது. அதேசமயம் பாஜகவோ 41.02% வாக்குகளைப் பெற்றிருந்தது.

1998-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 40.59% வாக்குகளைப் பெற்றிருந்தது. இதன்பின் 2018-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளைக் கழித்தே 40.89% வாக்குகளைப் பெற்றிருந்தது. இடையில் நடந்த தேர்தல்கள் அனைத்திலும் பாஜகவே ஆதிக்கம் செலுத்தியது. காங்கிரஸ் 31.61%, 32.39% 36.38% வாக்குகளே பெற்றிருந்தது.

வாரிசு அரசியல்?

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸை எதிர்த்து பாஜகவின் மிக முக்கியமான பரப்புரை என்பது வாரிசு அரசியல்தான். கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்களாக, மூத்த தலைவர்கள் தங்களது வாரிசுகளை உருவாக்குகின்றனர் என்பது பாஜகவின் குற்றச்சாட்டு. ஆனால் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அல்லாத ஒட்டுமொத்த அரசியல் வரலாற்றில், வாரிசுகள் அரச பதவிகளில் அமைச்சர்கள் போன்ற மிக முக்கிய பொறுப்புகளைப் பெற்று இருந்தாலும் அவர்கள் அமைச்சர் எனும் பொறுப்பை தாண்டி உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரவிஷங்கர் சுக்லா
ரவிஷங்கர் சுக்லா

மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சராக இருந்த ரவிஷங்கர் சுக்லா முதல் தற்போதைய பாஜக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வரை யாரும் வாரிசு அரசியலின் மூலம் முதலமைச்சராக பொறுப்பேற்றவர்கள் கிடையாது. ஒருவரைத் தவிர.

முன்னாள் முதலமைச்சர் ரவிஷங்கர் சுக்லாவின் மகன் ஷ்யாம் சரண் சுக்லா மத்தியப் பிரதேசத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். அதிலும் ரவிஷங்கர் சுக்லா 1956-ஆம் ஆண்டு மறைந்த நிலையில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்தே முதல்வராக பொறுப்பேற்றார் ஷ்யாம் சரண் சுக்லா.

கவிழ்ந்த காங்கிரஸ்

2018-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்திருந்தாலும் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9-ஆம் தேதி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேருடன் ஜோதிராதித்திய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அப்போது அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில், 18 ஆண்டுகளாக கட்சியில் உள்ளேன். தற்போது விலகவேண்டிய நேரம். மக்களுக்காக புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். பெரும்பான்மைக்கு 115 எம்.எல்.ஏ.க்கள் வேண்டும் என்பதால் ஆட்சி அமைத்த 15 மாதங்களில் பெரும்பான்மையையை இழந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. இதனைத்தொடர்ந்து சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பாஜக ஆட்சியை அமைத்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளரான சமாந்தார் படேல், 1200 கார்களில் 5000 ஆதரவாளர்களுடன் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

பாஜக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை முன்னிலைப்படுத்தாமல் தேர்தலைச் சந்திக்கிறது பாஜக. மறுபுறம் காங்கிரஸ் முன்னிலைப்படுத்தும் கமல்நாத் Soft Hindutva அரசியலை மேற்கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்துப் பேசிய கமல்நாத் 'இந்துத்துவா' அல்லது ' soft இந்துத்துவா' அல்லது 'சூப்பர் இந்துத்துவா' போன்ற பெயர்களுக்கு என்னால் கருத்து சொல்ல முடியாது என்றார். அதேசமயம் அரசியல் விமர்சகர்கள் இது குறித்து கூறுகையில் இது காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது. கமல்நாத்தை மட்டும் குற்றம் சுமத்த முடியாது என தெரிவிக்கின்றனர்.

கமல்நாத் இதுகுறித்து மேலும் கூறுகையில், "நம்பிக்கை மற்றும் கலாசாரத்திற்கு ஏற்ப பணியாற்றுவது ஒவ்வொருவரின் கடமை. மதம் என்பது எங்களுக்கு நடத்தை மற்றும் சிந்தனைதான் . பிரச்சாரம் அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச காங்கிரஸ்

மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அக்கட்சி ஓபிசி பிரிவு மக்களது வாக்குகளை நம்பியுள்ளது. ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் தலைவர்கள் ஓபிசி மக்களது ஆதரவைப் பெரும் வகையில் தங்களது பரப்புரைகளை அமைத்துக் கொள்கின்றனர்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பீகாரைப்போல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர். அதேசமயம் மத்தியப் பிரதேச பாஜகவிற்கும் ஓபிசி பிரிவு மக்களிடையே செல்வாக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு புறம் பாஜகவினர், தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி அரசை கவிழ்ப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். 106 பக்க தேர்தல் அறிக்கைகளை வெளியிட்ட கமல்நாத் 59 வாக்குறுதிகளையும், 101 முக்கிய உத்தரவாதங்கள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு, விவசாயக் கடன் தள்ளுபடி, அனைத்து மக்களுக்கும் 25 லட்சம்வரை மருத்துவக் காப்பீடு போன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

மத்தியப் பிரதேச பாஜக

மத்தியப் பிரதேச பாஜகவை பொறுத்தவரை கர்நாடகத்தில் ஏற்பட்ட தோல்வி மத்தியப் பிரதேசத்திலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் பழங்குடியின மக்களின் வாக்குகளைப் பெற பாஜக பெரும் முயற்சி செய்து வருகிறது. ராமரை பழங்குடியின மக்கள் பார்த்துக்கொண்டார்கள் என்றெல்லாம் புகழாரம் சூட்டியிருந்தது பாஜக.

ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஏழைகளுக்கு இலவச ரேசன், ரூ.450-க்கு எல்.பி.ஜி. சிலிண்டர், மத்தியப் பிரதேச தொழில்நுட்பக் கழகம், மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் நிறுவனம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது காங்கிரஸ். மேலும் 100 யூனிட் மின்சாரம் 100 ரூபாய்க்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பெண்கள் அதிகமுள்ள மாநிலம் என்பதால் இரு கட்சிகளும் பெண்களுக்கான வாக்குறுதிகளில் கவனம் செலுத்தியுள்ளது. பாஜகவை பொறுத்தவரை கிராமங்களைச் சேர்ந்த 15 லட்சம் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளுக்கு கே.ஜி. முதல் பி.ஜி. வரை இலவசக் கல்வி போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேச தேர்தலை இருபெரும் தேசிய கட்சிகளும் மிக முக்கியமான ஒன்றாகவே பார்க்கின்றன. அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்தியப் பிரதேசத்தில் 29 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. தற்போது ஆட்சி அமைக்கும் கட்சி அடுத்த வருடம் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்தும் என்பதால் இருகட்சிகளும் போட்டி போட்டு பரப்புரை செய்து வருகின்றன.

மத்தியப் பிரதேசத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் கிட்டத்தட்ட 39 லட்சம் நபர்கள் வேலையற்றவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக CNBC TV18 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தனது பரப்புரையில் இதை மிக முக்கிய பிரச்னையாக முன்னெடுத்துள்ளது. இரண்டு கட்சிகளும் வேலை வாய்ப்பு குறித்த பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.

பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், “நாங்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டால் அரசாங்கம், குடும்பத்தினர் ஒருவருக்கு வேலையை உறுதி செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய வேட்பாளர்கள்

மத்தியப் பிரதேசத்தில் கங்கிரஸ் கட்சியின் முக்கிய வேட்பாளர்கள் எனும் வரிசையில் கமல்நாத், விக்ரம் மஸ்தல், கோவிந்த் சிங் போன்றோர் இடம்பெற்றுள்ளனர். பாஜகவில் கைலாஷ் விஜய்வர்கியா, முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், நரோட்டம் மிஷ்ரா, அம்ப்ரிஷ் சர்மா போன்றோர் உள்ளனர்.

இதில் முன்னாள் முதல்வர் கமல்நாத், சிந்திவாரா தொகுதியில் போட்டியிட உள்ளார். தற்போதைய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் புத்னி தொகுதியில் போட்டியிட உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com