விலை உயரும் அபாயம்..? கேஸ் சிலிண்டருக்கு அதிகரிக்கும் முன்பதிவு.. கட்டுப்பாடு விதித்த மத்திய அரசு!
எல்பிஜி பதுக்கலைத் தடுக்க, மத்திய அரசு முன்பதிவு காலத்தை 21-லிருந்து 25 நாட்களாக நீட்டித்துள்ளது. விலை அதிகரிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் முன்பதிவை விரைவாக செய்து வருகின்றனர். உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக எல்பிஜிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு..
2024 -25ஆம் ஆண்டில் இந்தியாவில் சமையல் எரிவாயுவான எல்பிஜியின் நுகர்வு, 3 கோடியே 13 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது. இதில், 1 கோடியே 28 லட்சம் டன் எல்பிஜி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், எஞ்சிய தேவையில் 90 சதவீதம் வரை, சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டது. மேற்காசியாவில் போர் விரிவடைந்து வரும் சூழலில், சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசர கால உத்தரவை பிறப்பித்திருந்தது
சிலிண்டர்களுக்கான முன்பதிவு காலத்தை நீட்டித்த அரசு..
இதனைத் தொடர்ந்து பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைப்படுத்தலைத் தடுக்க, எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கான முன்பதிவு காலம் 21-லிருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
விலை அதிகரித்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக முன்னர் 55 நாட்களில் எல்பிஜி சிலிண்டர்களை முன்பதிவு செய்தவர்கள் இப்போது 15 நாட்களில் சிலிண்டர்களை முன்பதிவு செய்யத் தொடங்கி உள்ளனர்.
அரசாங்கம் உற்பத்தியை அதிகரிக்க சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளது, மேலும் வணிக எல்பிஜி இணைப்புகளை விட வீட்டு உபயோக எல்பிஜிக்கு முன்னுரிமை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 130 அமெரிக்க டாலர்களைத் தாண்டும் வரை, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும், இந்தியாவில் போதுமான அளவு இருப்பு இருப்பதால் எரிபொருள் விலைகள் அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
நாட்டின் எந்த பம்பிலும் பெட்ரோல் மற்றும் டீசல் பற்றாக்குறை பிரச்சினை இல்லை. அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, கனடா, நார்வே போன்ற நாடுகள் இந்தியாவிற்கு எல்பிஜி விற்க அணுகியுள்ளன என்றும் ,ஹார்முஸ் ஜலசந்தி பாதையைத் தவிர வேறு இடங்களில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை அரசு துரிதப்படுத்தியுள்ளது என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது
மேலும், இந்தியாவில் போதுமான அளவு விமான டர்பைன் எரிபொருள் (ATF) இருப்பு இருப்பதாகவும் விமான டர்பைன் எரிபொருள் பற்றி அச்சம் அடையத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

