”என் மகனுக்கு தூக்குத்தண்டனை கொடுங்கள்” - தவறு செய்த மகன்; நீதியின் பக்கம் நின்று சாட்சியளித்த தாய்!

திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஹிஜாலாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தாய் தனது மகனுக்கு எதிராக சாட்சி சொன்னது வழக்கில் மிக முக்கிய திருப்பமாக அமைந்தது.
court
courtpt web

வரலாற்றில் மிக அரிதான தருணங்களில்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும். தவறு செய்தது தன்னுடைய மகனே என்றாலும் தண்டனை உண்டு என்பதை நிலை நாட்டினான் மனுநீதிச் சோழன். இங்க ஒரு தாய் தவறு செய்த தன்னுடைய மகனுக்கு தண்டனை கிடைக்க தானே சாட்சியாக மாறியிருக்கிறாள். பாசத்தைவிட நீதியே முக்கியம் என்ற அவரது முடிவு மகத்தானது. என்ன நடந்தது? விரிவாக பார்க்கலாம்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிஷால்கர் முனிசிபிலில் துப்புரவு தொழிலாளராக பணியாற்றிய 55 வயதான கிருஷ்ண தாஸ் என்ற விதவை பெண்மணி அவரது வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் குற்றவாளிகளால் கைவிடப்பட்ட கிணற்றில் வீசப்பட்டது. இந்த வழக்கு தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வந்தது.

கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த பிரிவுகளில் 24 வயதான சுமன் தாஸ் மற்றும் அவரது நண்பர் 26 வயதான சந்தன் தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால், குற்றம் நடந்து ஒரு வாரத்திற்கு பின் உடல் மீட்கப்பட்டதால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. கொலை செய்த வழக்கில் மட்டும் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “குற்றவாளிகள் அப்பெண்மணியை பாலியல் வன்கொடுமை செய்து அவரை கொலை செய்தனர். பின் அவரது உடலை கைவிடப்பட்ட கிணற்றில் வீசினர். கொலை செய்யப்பட்டவரது உடல் மீட்கப்பட்ட பின் கிருஷ்னதாஸின் மருமகள் சுமித்ரா தாஸ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது” என்றார்.

குற்றவாளிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் சுமனின் தாயார் உட்பட 25 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு சாட்சியங்கள் பெறப்பட்டது. இந்த வழக்கில் சுமனின் தாயார் நமிதா தாஸ், குற்றம் செய்த தனது மகன் மற்றும் அவரது நண்பர் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யும் விதமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சாட்சியம் அளித்தார். விசாரணையின் போது நமீதா தாஸ் தனது மகனுக்கு மரண தண்டனை கோரியதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கு திரிபுராவில் உள்ள செபாஹிஜாலா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த நிலையில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் கூடுதலாக மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. தனது மகனே குற்றத்தை செய்திருந்தாலும் அவரது தாய் நீதியின் பக்கம் நின்று உண்மையை சாட்சியமாக சொன்னது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com