டெல்லி தேர்தல் | களத்தில் குதித்த இடதுசாரி கட்சிகள்... I-N-D-I-A கூட்டணியின் நிலை என்ன?
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஒற்றுமையுடன் சந்திப்பதற்காக காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், சமாஜ்வாதி உள்ளிட்ட 28 கட்சிகள் ’I-N-D-I-A’ என்ற பெயரில் கூட்டணி அமைத்தன. முன்னதாக, இந்தக் கூட்டணியை ஆளும் பாஜகவுக்கு எதிராக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உருவாக்கியிருந்தார். பின்னர், கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் அப்போதே அதிலிருந்து விலகிய நிதிஷ், பாஜகவுக்குத் தாவினார்.
இதனைத் தொடர்ந்து ’I-N-D-I-A’ கூட்டணியை காங்கிரஸ் வழிநடத்தி வருகிறது. ஆனாலும் ’I-N-D-I-A’ கூட்டணி என்ற அமைப்பு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாகச் செயல்படாமல் 'ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு; ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு நிலைப்பாடு' என்கிற நிலையில் அது பயணித்துக் கொண்டிருக்கிறது. முக்கியமாக, ’I-N-D-I-A’ கூட்டணியை முழுமையாக ஒழுங்குபடுத்துவதில் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்கிற விமர்சனமும் வைக்கப்படுகிறது.
மேலும், தலைமை குறித்து உரிய முடிவு எடுக்கப்படாதது, கூட்டணியில் விரிசல் எனப் பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவே மக்களவைத் தேர்தல் மட்டுமல்லாது மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் இந்தக் கூட்டணி, பெருத்த தோல்வியை அடைந்தது. பெரும்பாலும் சட்டசபைத் தேர்தல்களில் மாநிலக் கட்சிகள் காங்கிரஸை விரும்பவில்லை. கூட்டணியில்லாமல் தனித்தே போட்டியிட்டன. இது, தற்போதைய டெல்லி தேர்தலிலும் எதிரொலித்துள்ளது.
ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மோதல் நிலவியதால் இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. பாஜகவுக்கு காங்கிரஸ் மறைமுகமாக உதவுவதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் I-N-D-I-A கூட்டணியில் உள்ள திரிணமூல், சமாஜ்வாதி, உத்தவ் சிவசேனா, சரத் பவார், தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் கட்சிகள் ஆம்ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையே I-N-D-I-A கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரி கட்சிகள் டெல்லி சட்டப் பேரவை தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. சிபிஎம் 2 தொகுதிகளிலும் சிபிஐ 4 தொகுதிகளிலும் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 64 தொகுதிகளில் பாஜகவை தோற்கடிக்கக்கூடிய வலிமையான எதிர்க்கட்சிக்கு ஆதரவு தர உள்ளதாக சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். இது, அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் உமர் அப்துல்லா I-N-D-I-A கூட்டணியைக் கலைத்துவிடலாம் என வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பீகாரின் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும், இது 2024 உடன் முடிந்தபோனது எனத் தெரிவித்திருந்தார்.