தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீச முயற்சி.. தலைவர்கள் கண்டனம்
உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் பதவியேற்று பணியாற்றி வருகிறார். நவராத்திரி விடுமுறைகள் முடிந்து வழக்கம் போல் இன்று உச்சநீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்தன. அப்போது, உச்ச நீதிமன்றத்தின் முதன்மை அமர்வான தலைமை நீதிபதி அமர்வுக்குள் நுழைந்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் என்பவர் அவரது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் மீது வீச முற்பட்டார். ஆனால், ஏற்கனவே பாதுகாப்பு பணிகள் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் வழக்கறிஞரை பிடித்து நீதிமன்ற அறைக்குள் இருந்து வெளியே கொண்டு சென்றனர். அப்போது, அந்த வழக்கறிஞர் “சனாதனத்தின் மீதான அவமானங்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்” என கூச்சலிட்ட படியே வெளியே சென்றுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது நீதிமன்ற வளாகத்திலேயே காலணி வீச முற்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அங்கிருந்த பிற வழக்கறிஞர்களிடம் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய், "இவற்றால் திசை திரும்பிவிடாதீர்கள்; நாங்கள் திசை திரும்பவில்லை. இவையெல்லாம் என்னைப் பாதிக்காது" என்று கூறி, வழக்குகளின் விசாரணையைத் தொடர்ந்தார். இந்நிலையில் காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது ஒழுங்கு நடவடிக்கைகளை அகில இந்திய பார் கவுன்சில் (BCI) தொடங்கியுள்ளது. அதன்படி, அவரின் வழக்கறிஞர் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. விஷ்ணு சிலை புதுப்பிப்பு தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி கூறிய கருத்து சர்ச்சையாகியிருந்த நிலையில் இத்தாக்குதல் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல் என தெரிவித்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், இது நமது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் தெரிவித்திருக்கிறார்.
"தாக்குதல் நடத்தியவர் தனது செயலுக்கான காரணத்தை வெளிப்படுத்தியிருப்பது, நமது சமூகத்தில் அடக்குமுறை மற்றும் மனநிலை இன்னும் எவ்வளவு ஆழமாக நீடிக்கிறது என்பதைக் காட்டுகிறது" எனவும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
நமது அமைப்புகளை மதிக்கும், பாதுகாக்கும் ஒரு கலாச்சாரத்தை வளர்க்க வேண்டும் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்துக் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே மாண்புமிகு இந்தியத் தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டிக்க எந்த வார்த்தைகளும் போதாது. இந்தச் சம்பவம், தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல; இது நமது அரசியலமைப்பின் மீதான தாக்குதல் ஆகும். தலைமை நீதிபதி கவாய் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொண்டார். ஆனால், தேசமே ஆழ்ந்த துயரத்துடனும், கோபத்துடனும் அவருக்கு ஆதரவாக ஒன்றிணைந்து நிற்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.