ஜம்மு பல்கலைக்கழக விடுதி... பால்கனியிலிருந்து விழுந்த சட்டம் பயிலும் மாணவர்!
ஜம்மு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு சட்டம் பயிலும் 25 வயதான மாணவர் ஒருவர், தான் தங்கியிருந்த விடுதியின் பால்கனியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இறந்தவர் உதம்பூர் பஞ்சாயிரைச் சேர்ந்த தேவ் ராஜின் மகன் விஷால் பரத்வாஜ் என்கிற பன்னி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கத்ராவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் ஐந்தாம் செமஸ்டரில் படித்து வந்த இவர், பல்கலைக்கழகத்தின் வளாகத்தின் உள்ளேயே இருந்த ஜம்பு லோச்சன் விடுதியில் தங்கியிருந்தார். விஷால் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், வாந்தி எடுக்க பால்கனியில் கால் வைத்து, சமநிலையை இழந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், அதிகாரிகள் இதுகுறித்து தெரிவிக்கையில், இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், சில நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்தை அடைந்ததாகவும் தெரிவித்தனர். மேலும், "அவர் உடனடியாக ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்," என்று தெரிவித்துள்ளனர்.
இறந்த மாணவருடன் பயிலும் சக மாணவர்களின் கூற்றுப்படி, விடுதியில் பணிபுரியும் ஒருவர் CPR மூலம் அவருக்கு முதலுதவி செய்ய நினைத்தார். ஆனால், விஷாலை காப்பாற்ற முடியவில்லை.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை, துணைவேந்தர் அலுவகலத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவி விழுந்தநிலையில், அவரை அழைத்து செல்ல பல்கலைக்கழகத்தின் ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாகவும், இதனால், தனியார் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்ததாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அங்கிருந்த லகோத்ரா என்பவர் தெரிவிக்கையில் ,” "பல்கலைக்கழக சுகாதார மையத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. விஷாலை சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் தாமதமாக தனியார் வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. மருத்துவமனைக்கு வந்தவுடன் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சரியான நேரத்தில் ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றிருந்தால், அவரைக் காப்பாற்றியிருக்க முடியும் ” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், சம்பவம் நடந்த ஒன்பது நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்ததாக பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் கூறினார். கடந்த செவ்வாய் கிழமை (17.6.2025) அன்று, இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்திருக்கிறது.
இந்நிலையில், இறந்த விஷாலின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டநிலையில், இறுதிச் சடங்குகளுக்காக உடல் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய போலீசார் விசாரணை நடவடிக்கைகளையும் தொடங்கியுள்ளனர்.